திமுக கூட்டணியில் மோதல் : “லக்ஷ்மண் ரேகை” காங்கிரஸ் வார்னிங்

திமுக கூட்டணி கட்சிகள் லட்சுமண ரேகையை மதித்து நடக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எச்சரித்து இருக்கிறார்.
Congress MP Manickam Thakur warned DMK alliance parties, should respect Lakshman Rekha
Congress MP Manickam Thakur warned DMK alliance parties, should respect Lakshman Rekha
2 min read

திமுக கூட்டணியில் புகைச்சல்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களை இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி, தவெக தலைவர் நடிகர் விஜயை சந்தித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

பிரவீன் சக்கரவர்த்தி

இதற்கு முத்தாய்ப்பாக திமுக அரசு கடன் வாங்குவதால், தமிழகம் எவ்வாறு தத்தளிக்கிறது. ஆனால், பாஜக ஆளும் உத்தர பிரதேசம் கடன்சுமையை எவ்வாறு குறைத்து இருக்கிறது என்பதை ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

கொம்பு சீவும் காங்கிரஸ்

இது மோதலுக்கான வழியாகவே பார்க்கப்படுகிறது. மறைமுகமாக தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு கண்டனம்

இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர், “ விடுதலை சிறுத்தைக்கட்சி, மதிமுக, கம்யூ., கட்சிகள் ஆகியோர், எதிர்கட்சி தலைவர் ராகுலிடம் காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி புகார் கூறிய செய்தி படித்தேன். இது, ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிடுவதா?

காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக் கொள்வார்களா?

காங்கிரஸ் கூறினால் நீங்கள் ஏற்பீர்களா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார், மதிமுகவின் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?

கூட்டணி - பரஸ்பர மரியாதை அவசியம்

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன. பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

கூட்டணி ஒழுக்கம்

ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும்.

கம்யூ. தலைமைக்கு வேண்டுகோள்

இது கட்சி செயல் வீரர்களின் தன்மான உணர்வை தூண்டும்.கம்யூனிஸ்ட் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் , கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

லக்ஷ்மண் ரேகையை தாண்டக்கூடாது

அதேபோல், துரை வைகோ, திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மவுனம் அல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது.

கூட்டணி தர்மம் - எச்சரிக்கை

கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in