

ஜனநாயகன் சர்ச்சை - ஆதரவு குரல்கள்
Jana Nayagan Censor Certificate Issue : தணிக்கை வாரியம் அனுமதி வழங்காததால் நடிகர் விஜய் நடித்த “ஜனநாயகம்” திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது. எனவே, பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள். திரைத்துறையில் இருந்து ஆதரவு குரல்கள் வந்தவண்ணம் உள்ளது.
தமிழக காங்கிரஸ் கண்டனம்
அந்தவரிசையில் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ” அன்புள்ள @PMOIndia @narendramodi அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.
கலைஞனை இலக்கு வைக்கக் கூடாது
அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்து கொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதை தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது.
அரசியலை விலக்கி வைப்போம்
கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம். மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள்.
உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
=======================