
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சிபிஆர் தாயார் ஜானகி அம்மாள் பெருமிதம் :
இந்தநிலையில், திருப்பூரில் வசிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனின் தாயார் ஜானகி அம்மாள், “ குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போல வரவேண்டும் என எண்ணியே தனது மகனுக்கு ராதாகிருஷ்ணன் என பெயர் வைத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது அது நிறைவேறும் தருணம் வந்து விட்டதாக” உணர்ச்சி பொங்க கூறுகிறார் ஜானகி அம்மாள்.
தொண்டர்களுடன் உற்சாக கொண்டாட்டம் :
பாஜக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர், “.எங்களுக்கு மகன் பிறந்த போது குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போல வரவேண்டும் என்பதற்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டு ராதாகிருஷ்ணன் என பெயர் வைத்தோம். தற்போது உண்மையிலேயே அது நிறைவேறிவிட்டது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ராதாகிருஷ்ணன் நிச்சயம் வெற்றி பெற்று மக்கள் சேவையை தொடர்ந்து செய்வார்.
தமிழ்நாட்டிற்கும், திருப்பூருக்கும் பெருமை :
அவர் குடியரசு் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது தமிழ்நாட்டுக்கும் திருப்பூருக்கும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாக உள்ளது. அதே நேரத்தில் எனது மகனை குடியரசு துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வாய்ப்பளித்த பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் முதல் துணை ஜனாதிபதி :
1957ல் பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன், 16 வயதில் அரசியலில் நுழைந்தார். ஆர்எஸ்எஸ் சேவகராக தொடங்கிய இவரது வாழ்க்கை, துணை ஜனாதிபதி என்ற உயரிய பொறுப்பை வரை உயர்ந்து இருக்கிறது.
மாநிலங்களவை மற்றும் மக்களவையில் 6 எம்பி பதவிகள் காலியாக உள்ளன. இதன் காரணமாக இந்த தேர்தலில் 782 எம்பிக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். 392 எம்பிகளின் ஆதரவை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
சிபிஆர். வெற்றி உறுதி :
தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 422 எம்பிக்கள் இருக்கும் நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி என்கின்றனர் பாஜகவினர். இந்தியா கூட்டணி அல்லது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சில கட்சிகளும் இவரை ஆதரிக்க வாய்ப்பும் உள்ளது.
=====