

இலங்கையை புரட்டி போட்ட ’டிட்வா’
Ditwah Cyclone Latest Update in Tamil : வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான 'டிட்வா' புயல், அந்நாட்டில் வரலாறு காணாத மழையை பெய்யச் செய்திருக்கிறது. பலி எண்ணிக்கை 100-ஐ எட்டும் நிலையில், இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
தமிழகம் நோக்கி டிட்வா
இலங்கையில் இருந்து முழுமையாக நீங்கிய டிட்வா புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக வட தமிழகம் நோக்கி மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.
நாகையில் கொட்டித் தீர்க்கும் மழை
நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதலே பலத்த மழை கொட்டித் தீர்க்கிறது. இடைவிடாது பெய்யும் மழையால், சாலைகள் வெள்ளக் காடாக மாறி இருக்கின்றன. அதிகபட்சமாக கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
டெல்டாவில் பலத்த மழை
சென்னைக்கு தெற்கே 400 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்வதால், டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயல், நாளை அதிகாலையில் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்.
சென்னையில் பரவலாக மழை
இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தாலும் சென்னை முழுவதும் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
வலுவிழந்து கரையை கடக்கும்
சென்னையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்படி நிகழா விட்டால், தெற்கு ஆந்திரவை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமானது கரையை கடக்கலாம்.
90 கி.மீ. வேகத்தில் காற்று
டிட்வா புயல்(Ditwah Cyclone Alert in Tamil Nadu) காரணமாக தரைக்காற்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால், நாகை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்துள்ளது.இன்று காலை 6 மணி வரை பதிவான மழைப்பொழிவு பார்க்கலாம்.
* நாகப்பட்டினம்- 61 மி.மீ
* திருப்பூண்டி- 92 மி.மீ
* வேளாங்கண்ணி- 95 மி.மீ
* திருக்குவளை- 46 மி.மீ
* தலைஞாயிறு- 87 மி.மீ
* வேதாரண்யம்- 145 மி.மீ
* கோடியக்கரை - 250 மி.மீ.
* பாம்பன்- 74 மி.மீ
* ராமேஸ்வரம்- 74 மி.மீ
* தங்கச்சிமடம்- 74 மி.மீ
* மண்டபம்- 70 மி.மீ
* தீர்த்தாண்டத்தானம்- 63 மி.மீ
* வட்டானம்- 54 மி.மீ
* கடலாடி- 54 மி.மீ
* திருவாடானை- 53 மி.மீ
* வாலிநோக்கம்- 52 மி.மீ
* தொண்டி- 52 மி.மீ
* ராமநாதபுரம்- 49 மி.மீ
* ஆர்.எஸ்.மங்கலம்- 48 மி.மீ
* பரமக்குடி- 45 மி.மீ
* முதுகுளத்தூர்- 45 மி.மீ
* கமுதி - 43 மி.மீ
ரெட் அலெர்ட்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட்
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலெர்ட்
வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.
விமான சேவை பாதிப்பு
புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நீர் திறப்பு அதிகரிப்பு
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 2,500 கன அடியாகவும், புழல் ஏரியில் வினாடிக்கு 1,000 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர்,காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 4ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
===