
கரூர் சம்பவம் பலி உயர்வு
கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்தோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 13 ஆண்கள், 18 பெண்கள், 9 குழந்தைகள் உயிரிழந்தனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 திருப்பூர், திண்டுக்கல், சேலத்தை சேர்ந்த தலா இரண்டு பேர் அடங்குவர்.
கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் இன்று அதிகாலை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருநபர் ஆணையம் விசாரணை
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில், ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்ட பகுதியான வேலுசாமிபுரத்தில் நேற்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்களிடம் விசாரணை
அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் நடைபெற்ற சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
2வது நாளாக விசாரணை
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார். சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழிந்தவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரித்து வருகிறார்.
புதிய விசாரணை அதிகாரி
கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி பிரேமானந்தன் என்பவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
=====