
கரைபுரளும் காவிரி :
Farmers on Kaveri Water Mixing in Sea : ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபாடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால், அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால், மேட்டூர் அணை(Mettur Dam) நிரம்பி, உபரி நீர் முழுவதும் காவிரி வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில், காவிரி ஆற்றின் உபரி நீர் கடலில் சென்று வீணாகிறது. டெல்டா மாவட்டங்களில் ஒலிக்கும் ஒரே குரல், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வீணாகிறது என்பதுதான்.
வறண்டு கிடக்கும் கடைமடை பகுதிகள் :
காவிரியில் வெள்ளம் கரை புரண்டாலும் கடைமடையில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் வறண்டுதான் இதற்கு தீர்வு காண, கடலில் கலக்கும் நீரை, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர், மேலணை (முக்கொம்பு), கல்லணை, கீழ்ணை (அணைக்கரை) மூலம், பாசன வசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
வளம் கொழிக்கச் செய்யும் காவிரி :
இதில் காவிரி, வெண்ணாறு ஆறுகளில் மட்டுமே 36 ஆறுகள் பிரிந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை வளப்படுத்துகின்றன. இதன் மூலம் 15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கல்லணை கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.
டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 764 ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்வளத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. காவிரி நீர்(Kaveri Water Issue) டெல்டா மாவட்டங்களில், 11 ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்திற்கு வாய்க்கால்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
காவிரியில் அரசுகளின் அலட்சியம் :
பழங்கால மன்னர்கள் ஏற்படுத்திய இத்தகையை அற்புத நீர் மேலாண்மையை, விவசாயிகளும், அரசாங்கமும் முறையாக பராமரிக்க தவறியதின் விளைவுதான். வீணாக கடலில் உபரி நீர் கலக்கிறது. இதை தடுத்து, காய்ந்து போன ஏரி, குளங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு(Mettur Dam Water Open) இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கொம்பில் இருந்து 37,389 கன.அடியும், கல்லணையில் இருந்து 3,718 கன அடியும் நீர் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீராக செல்கிறது.
ஏரி, குளங்களை நிரப்ப கோரிக்கை :
கடைமடை மாவட்டங்களில் ஏரி, குளங்கள் அனைத்தும் இன்னும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி முக்கொம்பு முதல் மயிலாடுதுறை பழையறை வரை 150 கிலோ மீட்டர் பயணிக்கும் கொள்ளிடம் ஆறு, பல லட்சம் ஏக்கர் விவசாயமும், கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிதளமாகவும் உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட முடியும்.
திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? :
இதனால், ஏரி குளங்கள் நிரம்பும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும் எனக் கூறி அதிகாரிகள் தட்டிக் கழிப்பதால், ஆண்டுக்கு 8 மாதங்கள் ஏரிகள், குளங்கள் வறண்டுதான் கிடக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.
இந்த முறையாவது, திமுக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
====