
ஆனிப் பெருந்திருவிழா :
நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆனிப்பெருந் திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் :
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலையில், சுவாமியும் அம்மனும் தேரில் எழுந்தருளினர். முக்கிய பிரமுகர்களும், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து நெல்லையப்பரை வழிபட்டனர்.
கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம் :
தேரோட்டத்தை ஒட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ட்ரோன் கேமராக்கள் மற்றும் 300 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தேரோட்டம், பக்தர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
நான்கு ரத வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மருத்துவக்குழு. நடமாடும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
====