

Devotees are waiting in anticipation to see whether a lamp will be lit today—on the auspicious occasion of Karthigai Deepam—atop the *deepa thoon* (lamp pillar) at Tirupparankundram, and whether the Supreme Court's directive will be implemented.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை நாளான இன்று (24-ம் தேதி) மாலை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு - தமிழக அரசு சீராய்வு மனு
இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு நேற்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அறிவிப்பு வெளியாகவில்லை
இருப்பினும் இன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே திருக்கார்த்திகை நாளையொட்டி முருகப்பெருமானை தரிசிக்கவும், தீப தரிசனம் காணவும் ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
7,000 போலீசார் குவிப்பு
இதற்காக 4 டிஐஜிக்கள், 7 எஸ்பிக்கள், 10 கூடுதல் எஸ்பிக்கள், 45 டிஎஸ்பிக்கள், 100-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 7,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் மற்றும் புறநகரில் இருந்து 3,000 போலீஸாரும், வெளிமாவட்டங்களில் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்களிடம் தீவிர சோதனை
திருப்பரங்குன்றத்தில் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மலை உச்சியிலும் போலீஸ் குவிப்பு
கோயில், மலையடிவாரப் பாதைகள், மலை உச்சியில் உள்ள தீபத்தூண், காசி விஸ்வநாதர் கோயில், தர்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை உச்சியில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உச்சிப்பிள்ளையார் கோயில், தீபத்தூண், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் பாதைகள் உள்ளிட்ட பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டலம், ட்ரோன்கள் பறக்கத் தடை
திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், சிடிஆர்.நிர்மல்குமார்...
தலைமைச் செயலர் எம்.சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, தீபம் ஏற்றுவதில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், செயல்படுத்தாவிட்டால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள், அடுத்தகட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பதற்றமான சூழ்நிலைக்கு இடையே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழக்கம் போல் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா, இதற்கு அரசு அனுமதிக்குமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் காத்துள்ளனர்.
144 தடை உத்தரவு
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி, மதுரை மாவட்ட எல்லைக்குள் எந்தவிதமான பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்லது பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மலையேறத் தடை
திருப்பரங்குன்றம் மலையில் பொதுமக்கள் ஏறிச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த உத்தரவு நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்து, நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
=====================