

தமிழக தேர்தல் களம்
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டியோடு ஆரம்பத்தில் களம் சூடுபிடிக்க தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழகம்
“தவெகவுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி. களத்திலேயே இல்லாத மற்றும் பலரைப் பற்றி நாங்கள் ஏன் பேசவேண்டும்?” என தவெக தலைவர் விஜய்யும் தொடர்ந்து பேசினார்.
இது மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், தேர்தல் அறிவிப்பு, வேட்புமனு தாக்கலுக்கு பிறகு தவெகவின் பிரசாரத்தில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
தலைவர்கள் தீவிர பரப்புரை
முதல்வர் ஸ்டாலின், எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தினமும் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மற்றோரு பக்கம் சீமானும் பரப்புரையில் முனைப்புடன் உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் இதற்கு சளைக்காமல் வரிந்து கட்டி களத்தில் இருக்கிறார்கள்.
பரப்புரையில் தவெக பின்தங்குகிறதா?
தவெகவை பொருத்தவரை வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வந்தாலும், விஜய் எதிர்பார்த்த அளவு வாக்கு சேகரிக்க வரவில்லை என்பதே நிதர்சனம்.
பிரசாரம் செய்யும் இடத்திற்கு செல்லும் போது கூடும் கூட்டம் திராவிட கட்சிகளை அலற விட்டாலும், அந்தக் கூட்டமே விஜய் பரப்புரைக்கு தடையாகவும் அமைந்து இருக்கிறது.
விஜய் கூட்டங்கள் ரத்து
காரைக்குடியில் நேற்று நடைபெறுவதாக இருந்த பிரசாரம் காலதாமதம் காரணமாக ரத்தானது.
அதேபோன்று, கடலூரில் இன்று நடைபெற இருந்த பரப்புரை கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. நாளை நாகர்கோவிலில் பிரசார கூட்டம் நடைபெற இருக்கிறது.
கூட்டங்களில் பங்கேற்பதே விஜய் பிரச்னையாக இருப்பதால், தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில், அவர் எத்தனை இடங்களில் பரப்புரை செய்வார் என்றே தெரியவில்லை.
சீமான் பரப்புரை
நாம் தமிழர் சீமான் தீவிர பரப்புரை செய்தாலும், இலவசங்கள் இல்லாத, ஆக்கப்பூர்வ வாக்குறுதிகள் என்று அவர் கூறுபவை மக்கள் எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.
இரண்டு மாபெரும் கூட்டணி, தவெக விஜய் என இருக்கும் சூழலில், சீமானின் கட்சி எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே 4ம் தேதி தான் தெரியவரும்.
திமுக-அதிமுக அதிரடி பிரசாரம்
திமுக-வுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடைபெறும் அதிரடி தாக்குதல் பிரச்சாரமானது எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி, இருமுனைப் போட்டிதான் என்ற நிலையை நோக்கி நகர்த்தி வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகள்
திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசு பொருளாக இருக்கிறது.
ஸ்டாலின் வந்தால் இதை செய்வார், எடப்பாடி வந்தால் அதை செய்வார் என்று மக்கள் எடைபோட்டு பார்க்க தொடங்கி விட்டனர்.
‘ தாக்குதல்’ விமர்சனங்கள்
களத்தில் தங்களை மையப்படுத்தும் விதமாக, திமுகவும் அதிமுக-வும் ‘தாக்குதல்’ விமர்சனத்தில் இறங்கி இருக்கின்றன. இதனால், மற்ற கட்சிகளின் பிரசாரங்கள் மக்களிடையே பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.
எடப்பாடி பேச்சு, திமுக பதிலடி
அதிமுக அணியில் பழனிசாமி மட்டுமே பிரச்சார பீரங்கி. திமுக அரசின் ஊழல், முறைகேடுகள், குடும்ப அரசியல் என இவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எனவரிசைகட்டி வந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
என்ன செய்வார் விஜய்
எனவே, இன்னும் 10 நாட்களில் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டி இருப்பதால், விஜய் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகிறார், சீமான் வாக்குகளை எப்படி பிரிக்க போகிறார் என்பதே கேள்வியாக மாறி இருக்கிறது.
தமிழகம் திராவிட கட்சிகளின் கோட்டை என்ற கோட்பாடு மீண்டும் நிரூபிக்கப்படுமா என்பதை தேர்தல் முடிவு தான் வெளிப்படுத்தும்.
=============