

ஆளுநர் அர்லேகர்
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உள்ளார். தமிழக அரசியலில் சில தினங்களாக குதிரை பேரம் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
குதிரைபேர விவகாரம்
தவெக அரசை கவிழ்க்க திமுக சதி, பின்னணியில் ஆதரவு கொடுக்கும் அதிமுக, திமுக எம்எல்ஏவுக்கு தவெக மிரட்டல் என, அரசியல் களம் அனல் பறக்கிறது.
ஆளுநரை சந்தித்த திமுகவினர்
தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை திமுக பிரதிநிதிகள் சந்தித்து புகார் கடிதம் அளித்துள்ளனர்.
அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்கள் பங்கேற்றது, குதிரை பேரம், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டப்பட்டது தொடர்பாக ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
தவெக மீது ஆளுநரிடம் புகார்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சந்தித்தனர். தவெக வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளுநரை சந்தித்த அதிமுகவினர்
திமுகவினர் சந்தித்த சிறிது நேரத்தில் ஆளுநர் அர்லேகரை அதிமுக பிரதிநிதிகளும் சந்தித்து புகார் பட்டியல் ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தலைமையிலான குழுவினர் ஆளுநரை சந்தித்தனர்.
தவெக அரசு மீது புகார்
தற்போதைய அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி புகார் மனுவை அவர்கள் அளித்துள்ளனர்.
வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்
இன்று காலை பாஜக, மாலையில் திமுக, அதிமுக என தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டி களமிறங்கி இருக்கின்றன. இதனால், தமிழக அரசியல் களம் தகித்து போய் இருக்கிறது.
--------------------- .