

ஆட்சியை பறிகொடுத்த திமுக
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்து திமுக தோல்வியை சந்தித்து, எதிர்க்கட்சியானது. கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவினார்
கள ஆய்வு செல்லும் குழு
சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சாட்டையை சுழற்ற தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். இதற்காக கள ஆய்வு செய்யும் வகையில் 38 பேர் கொண்ட குழுவையும் அவர் அமைத்துள்ளார்.
ஸ்டாலின் ஆலோசனை
கள குழுவினருடன் ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள ஆய்வுக் குழுவுக்கு உத்தரவு
இந்தக் கூட்டத்தில் கள ஆய்வுக் குழுவினருக்கு பிறப்பித்த கட்டளைகள் குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
10 கட்டளைகள்
* நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
* தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
* நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
* இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
* திமுகவினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
* தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
* நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
* டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
* நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
* திமுகவினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
* அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
* நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் திமுகவில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
* ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
================