

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது நேற்று பதிலளித்த முதல்வர் விஜய், மிசா, சர்க்காரியா கமிஷன் தொடர்பாக கருத்துகளை தெரிவித்தார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலினும் குறித்தும் அவர் பேசி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
திமுக வலியுறுத்தல்
இன்று காலை அவை கூடியதும், திமுக கொறடா எ.வ. வேலு, ஆதாரங்கள் இன்றி முதல்வர் விஜய் பேசியதாக குறிப்பிட்டார். வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை தொடர்பான விவரங்களை சபையில் பேசக் கூடாது. சர்க்காரியா கமிஷன், மிசா தொடர்பாக தெரிவித்த கருத்துகளையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அமைச்சர்கள் விளக்கம்
இதற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா பதிலளித்து, நீக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினர். விதிகளுக்கு உட்பட்டே முதல்வர் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுப்பு
ஏற்கனவே அவையில் பேசியதை தான் முதலமைச்சர் பேசி உள்ளார். மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது பற்றி பேசி உள்ளார். மாறன் பற்றியும் ஏற்கனவே அவையில் பேசி உள்ளதை தான் முதல்வர் பேசி உள்ளார்.
அமலாக்கத்துறை என்ன சொல்லி உள்ளது என்பதை தான் முதலமைச்சர் பேசி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. முதலமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க அவசியம் இல்லை என்று பேரவை தலைவர் பதிலளித்தார்.
சபாநாயகர் இருக்கை முற்றுகை
இதை ஏற்க மறுத்த திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். அவையின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில், அவர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக திரண்டு தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
திமுக எம்எல்ஏக்கள் தர்ணா
திமுக எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும், உறுப்பினர்கள் தங்களது நிலையிலிருந்து பின்வாங்காமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக, மக்கள் பிரச்சினைகள் குறித்த முக்கியமான விவாதங்களைத் தொடர முடியாத சூழல் அவையில் உருவானது. எனவே, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவை முன்னவர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.
சபாநாயகர் உத்தரவு
சட்டமன்றத்தின் கண்ணியத்தையும், அதன் வழிமுறைகளையும் கட்டிக்காப்பது சபாநாயகரின் முதன்மைப் பொறுப்பாகும். அவையின் மரபுகள் மீறப்படும்போது, அதைச் சீர்செய்ய அவைக்குத் தலைமை தாங்குபவருக்குத் தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் தொடர் கூச்சல் மற்றும் அமளியால் அவையின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியதாக தெரிவித்த சபாநாயகர், திமுக உறுப்பினர்களை, உடனடியாகச் மன்றத்திலிருந்து வெளியேற்றுமாறு அவர் அவைக் காவலர்களுக்கு (Marshal) ஆணை பிறப்பித்தார்.
திமுகவினர் வெளியேற்றம்
சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, அவைக் காவலர்கள், திமுகவினரை வெளியேற்ற முயன்றனர். அவையை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை உறுப்பினர்களை, காவலர்கள் ஒன்றிணைந்து அவையிலிருந்து வெளியேற்றினர்.
அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள், சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்து அரசின் நடவடிக்கைகளுக்கும் சபாநாயகரின் உத்தரவுக்கும் எதிராகத் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
================