
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தலைவியாக இருப்பவர் திமுகவை சேர்ந்த தமிழ்ச்செல்வி. இவரது கணவர் அசோகன், திமுகவில் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு :
சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரை அருகே, அரசுக்கு சொந்தமான சாலை புறம்போக்கு புலம் எண்: 645/ 2ஏ என்ற இடத்தில், 3,135 சதுரஅடி பரப்பளவை, தமிழ்ச்செல்வி அத்துமீறி ஆக்கிரமித்தார். அங்கு இரண்டு அடுக்கு கட்டடத்தையும் அவர் கட்டி வருகிறார். அப்பகுதி மக்கள் தெரிவித்த எதிர்ப்பையும், ஆளும் கட்சி என்பதால், தமிழ்ச்செல்வியும், அவரது கணவரும் பொருட்படுத்தவில்லை.
நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர் :
நகராட்சி தலைவி தமிழ்ச்செல்வியின் அத்துமீறல் குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டடத்தை இடித்து அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி, நகராட்சி ஆணையர் நந்தினி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.1 கோடி நிலம் மீட்பு :
இந்தப் பகுதியில் அரசு நிலத்தின் மதிப்பு அதிகமாகவே உள்ளது. தமிழ்ச்செல்வி ஆக்கிரமித்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனத் தெரிய வந்துள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் கட்டிடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ச்செல்வி அரசு நிலத்தை ஆக்கிரமித்த போது, வருவாய்த்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவிட்டதன் காரணமாகவே அரசு நிலம் மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
======