

மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக சேலம் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில் சின்னக்காவூர் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார்.
விவசாயிக் குடும்பத்திற்கு அன்பளிப்பு
சின்னக்காவூர் பகுதியில் திரண்டிருந்த மக்களை சந்தித்துப் பேசிய முதல்வர் விஜய், அங்கிருந்த ஒரு விவசாயியின் வீட்டிற்கு நேரில் சென்றார்.
தன்னை இன்முகத்துடன் வரவேற்ற விவசாயக் குடும்பத்தினரை கௌரவிக்கும் வகையில், முதல்வர் விஜய் பட்டு வேட்டி மற்றும் சேலைகளை வழங்கினார்.
வாழ்வாதார நிலையை கேட்டறிந்த முதல்வர்
அவர்கள் என்ன விதமான விவசாயம் செய்கிறார்கள், வருவாய் எவ்வாறு வருகிறது என்பதைக் கேட்டறிந்தார்.
அதற்கு பதிலளித்த குடும்பத்தினர், வீட்டின் பின்புறம் வாழை மரங்கள் நட்டு வளர்த்து வருவதாகவும், அதுவே தங்களது முக்கிய வாழ்வாதாரம் என்றும் கூறினர். மேலும் அவர்களின் பிற தேவைகள் குறித்தும் முதல்வர் விரிவாகக் கேட்டறிந்தார்.
செல்லம் பாட்டிக்கு கூலிங்கிளாஸ்
உரையாடலுக்குப் பிறகு, அவ்வீட்டைச் சேர்ந்த செல்லம் என்ற முதிய பாட்டி ஒருவர் முதல்வர் விஜய்யின் கைகளைக் கோர்த்தபடி அவரை வழியனுப்ப வந்தார்.
கண்ணாடியின் விலை?
அவருக்குப் பிரியாவிடை கொடுத்த முதல்வர் விஜய், தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற சன்கிளாஸை பாட்டிக்கு அணிவித்து அழகு பார்த்தார். அந்தக் கண்ணாடியின் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை இருக்கும் என சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சியடைந்த பாட்டி
முதல்வரின் கண்ணாடியை அணிந்து கொண்ட பாட்டி, நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் நிருபர்களிடம் பேசுகையில், இந்தக் கண்ணாடியை அணிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
முதல்வருடன் கையசைத்து மகிழ்ச்சி
வீட்டை விட்டு வெளியே வரும்போது அங்குக் கூடியிருந்த மக்களைப் பார்த்து முதல்வர் கையசைத்ததுடன், தன் கையைப் பிடித்திருந்த பாட்டியையும் மக்களைப் பார்த்து கையசைக்கச் சொன்னார். பாட்டியும் முதல்வருடன் இணைந்து கையசைத்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் புன்னகையுடன் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இளைஞர்களின் அலைமோதல்
முதல்வர் அணிந்திருந்த கண்ணாடி என்பதால், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர்கள் அந்தப் பாட்டியைக் கண்டு பொறாமைப்பட்டு, பாட்டியின் அருகில் வந்து அந்த சன்கிளாஸை அணிந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
பெண் தொழிலாளர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து சேலம் விமான நிலையம் செல்லும் வழியில், விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடமும் முதல்வர் விஜய் நேரில் பேசி, அங்குள்ள நிலைமை மற்றும் நிறை குறைகளைக் கேட்டறிந்தார்.
அன்று எம்.ஜி.ஆர்..இன்று விஜய்
இதன் மற்றொரு பக்கம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பாட்டியுடன் எடுத்த புகைப்படத்தையும், இன்றைக்கு முதல்வர் விஜய் அந்த பாட்டியோடு எடுத்த புகைப்படத்தையும் இணைத்து சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
=====