

”உங்கள் கனவை சொல்லுங்கள்”
Nainar Nagendran Criticized DMK Government : முதலமைச்சர் ஸ்டாலின் ”உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். 2021-ல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இன்றிலிருந்து 30 நாட்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாக் குடும்பங்களையும் அரசின் சார்பில் நியமிக்கும் குழு உங்களைச் சந்திக்கும்.
அவர்களிடம் உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள். அதையெல்லாம் அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள். அவற்றை ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழக அரசின் புதிய திட்டம்
இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டம் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி இருக்கிறார்.
மக்களின் கனவுப் பட்டியல்
நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதலமைச்சருக்குத் தமிழ் நாடு மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்:
1. சீரான சட்டம் ஒழுங்கு.
2. கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.
3. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.
4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.
5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.
6. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.
7. தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.
8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.
9. விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.
10. கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
11. இந்துமத வெறுப்பில்லாத அரசு
திமுக இல்லாத தமிழகம்
மொத்தத்தில், திமுக இல்லாத தமிழ் நாடு வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும்” என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
======