வறண்ட காவிரி : ”ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு வழிபாடு” : களையிழந்த படித்துறைகள், சோகத்தில் டெல்டா மக்கள்!

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளும் செல்வமும் கிடைக்க வேண்டி, காவிரித் தாயை வணங்கி புதுத் தாலி மாற்றிக் கொள்வர்.
Dried-up Cauvery; digging a spring for Aadi Perukku worship—Delta residents in distress
Dried-up Cauvery; digging a spring for Aadi Perukku worship—Delta residents in distressgoogle
1 min read

பருவமழை பொய்த்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்கி ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தினர்.

ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு வழிபாடு

பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் காவிரியில் நீர்வரத்து குறைந்து ஆறு ஓடைபோல் காட்சி அளிக்கும் நிலையில், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்கி, ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு வழிபாட்டைச் செய்துள்ளனர்.

ஆடிப்பெருக்கின் முக்கியத்துவமும் நம்பிக்கையும்

'நடந்தாய் வாழி காவிரி' என்று வளம் செழிக்கச் செய்யும் காவிரித் தாய், ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடி கடல்ராஜனைச் சென்றடைகிறாள் என்பதே ஆடிப்பெருக்கின் ஐதீகமாகும்.

பாரம்பரிய வழிபாடு

ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் நாளன்று காவிரிக் கரையின் இருபுறமும் திரளும் மக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி போன்ற மங்கலப் பொருட்களை வைத்து காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தி வழிபடுவது வழக்கம்.

புதுமணத் தம்பதிகள்

ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுமணத் தம்பதிகள் காவிரிக் கரைக்கு வந்து, தங்களின் திருமண மாலையை ஆற்றில் விடுவர். மேலும் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளும் செல்வமும் கிடைக்க வேண்டி, காவிரித் தாயை வணங்கி புதுத் தாலி மாற்றிக் கொள்வர்.

ஓடையாக மாறிய காவிரியில் ஊற்றுத் தோண்டி வழிபாடு

வழக்கமாக ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர்வரத்து இல்லாததால் ஆறு மெலிந்து ஓடை போலக் காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் திரண்ட பொதுமக்கள், காவிரி ஆற்றுக்குள் இறங்கி ஓடையாக ஓடும் நீரின் கரைகளிலும், மணலில் ஊற்று தோண்டியும் காவிரித் தாயை வழிபட்டனர்.

தஞ்சையிலும் நீடிக்கும் அதே நிலை

தஞ்சையிலும் இதே நிலைதான் என்பதால் அங்கும் மக்கள் வழக்கம் போல உற்சாகமின்றி சம்பிரதாயத்திற்காக வழிபாடு செய்து வருகின்றனர்.

நீரின்றி காவிரி வறண்டு காணப்பட்டது டெல்டா பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in