

திமுக கூட்டணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் உறுதியாகி விட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், மதிமுகவிற்கு நான்கு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
அதிமுக கூட்டணி
எதிர்க்கட்சியான அதிமுக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
நாம் தமிழர் கட்சி
கட்சி தொடங்கியதில் இருந்து தனித்து போட்டியிடும் நாம் தமிழர் சீமான், இந்த முறையும் 234 தொகுதிகளிலும் தனித்தே களம் காண்கிறார்.
இதற்காக வேட்பாளர்களை அறிவித்த அவர், காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறது. தனித்து போட்டி, கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்ற நிலையில், அதிமுக கூட்டணிக்கு தவெக வரும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது.
பேச்சுவார்த்தை மும்முரம்?
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பாஜக சார்பிலும் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
இந்தநிலையில், திருச்சியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “ தவெக கூட்டணி குறித்த கேள்விகளுக்கும், திமுகவின் விமர்சனங்களுக்கும் பதிலளித்தார்.
விரைவில் தொகுதி பங்கீடு பேச்சு
“பியூஸ் கோயலுடன் இருமுறை பேசியபோதும், தேர்தல் தொடர்பான ஆலோசனையில்தான் ஈடுபட்டோம். தொகுதி பங்கீடு தற்போது பேசப்படவில்லை.
அது குறித்து பேசும் போது நாங்கள் தெரிவிக்கிறோம். எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
கெஞ்சி, கூத்தாடி திமுக-காங்கிரஸ் கூட்டணி
கூட்டணிக்காக 20 நாள் காங்கிரசும், திமுகவும் போராடிக் கொண்டிருந்தன. மாற்றி மாற்றி அறிக்கை விடுத்தனர். தற்போது கெஞ்சி கூத்தாடி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்சி பற்றி கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
ஸ்டாலின் மீது விமர்சனம்
பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது எல்லாம் தேவையான திட்டங்களை கொடுக்கிறார். திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும் மக்களிடம் பேசியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறது டெல்லியில் நடக்கவில்லை. இது முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
தவெகவுடன் பேசவில்லை
தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இல்லை என்று கூறும்பொழுது ‘நடத்துவீங்களா?’ என்ற கேள்வி தேவையில்லாதது. நாங்கள் இதுவரை அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி
எனக்கு தெரிந்தவரை பாஜகவினரும் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. விஜயை சிபிஐ விசாரணைக்கு அழைத்து இருப்பது, தனிப்பட்ட விவகாரம். திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. எங்கள் மீது விமர்சனம் செய்ய முடியவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
=====