

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு
திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விக்ரவாண்டி பொதுக்கூட்டத்தில், தங்கள் கூட்டணியில் இடம்பெற்றால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
கூட்டணி ஆட்சி - திமுக எதிர்ப்பு
இது காரணம் காட்டி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது. ஆனால், மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் தனித்து ஆட்சி என்பது தான் திமுகவின் நிலைப்பாடாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
இதை சுட்டிக்காட்டியே கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், கூட்டணி ஆட்சியா, தனிக்கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
காங்கிரஸ் கட்சி எதிர்வினை
ராகுல் காந்தியின் வலது கரம் என்று அழைக்கப்படும் பிரவீன் சக்ரவர்த்தி, ”கூட்டணி ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரச்னை இல்லை. மற்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெறும் போது, தமிழகத்தில் மட்டும் என்ன பிரச்னை என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.
அதிமுகவின் பயணம் எழுச்சி
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்தியா டுடே நடத்திய ‘Tamil Nadu Round Table 2026’ நிகழ்ச்சியில். கலந்துகொண்டு பேசிய அவர், “அதிமுகவின் பயணம் எழுச்சியாக இருக்கிறது.
210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
அதிமுக வெற்றி பெறும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் 210 இடங்களில் அதிமுக வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் அமரும் ” என்றார்.
1989ல் நானும், ஸ்டாலினும் எம்எல்ஏக்கள்
1989ல் தான் நானும் எம்.எல்.ஏ ஆனேன், ஸ்டாலினும் எம்.எல்.ஏ ஆனார். ஆனால் அவர் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கூட்டணி அமைப்பார்கள்.
அதிமுக கூட்டணியில் இருந்தவர்கள் திமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்கள்.
வேட்பாளர்கள் வாக்குகள் சிதறாமல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை
காங்கிரசை கடுமையாக எதிர்த்த திமுக அவர்களுடன் கூட்டணி அமைக்கும் போது, எனக்கும், தினகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
கருத்து வேறுபாடுகள் எல்லாம் கலைந்துவிட்டன. இன்று ஒன்றாக இணைந்துள்ளோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
எல்லா கட்சிகளும் வளர வேண்டும்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாக்கு வங்கி உண்டு. அதனடிப்படையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.
2021 தேர்தலில் 2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்திருப்போம்.
அதை இழந்த காரணத்தினால் எதிர்க்கட்சியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும், தங்களை வலுப்படுத்த வேண்டும். அந்த கட்சியின் சார்பாக எம்எல்ஏக்கள் வரவேண்டும்.
திமுக கூட்டணியில் குழப்பம்
கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்ற முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி ஒருவர் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.
இப்படிதான் காங்கிரஸ் திமுக இடையே குழப்பம் இருப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.
எங்கள் கூட்டணியில் பிரச்னை இல்லை
எங்கள் கூட்டணி தெளிவாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. அதிமுக ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா சொல்லிவிட்டார்.
முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்தான். யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளும் தெளிவாக உள்ளன.
தேர்தலை சந்தித்தால் செல்வாக்கு தெரியும்
ஒரு தேர்தலை கூட தவெக சந்திக்கவில்லை. ஒரு தேர்தலையாவது சந்தித்தால் தான் அவர்களுக்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்பது தெரியவரும்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எடுத்தவுடன் முதல்வராகவில்லை. பல ஆண்டுகாலம் உழைத்தார்கள்.
எம்ஜிஆரை சொல்லாமல் கட்சி நடத்த முடியாது
எம்.ஜி.ஆர் பேரை சொன்னால் தான் விஜய் கட்சியை நடத்த முடியும். எங்கள் தலைவர் மக்கள் செல்வாக்கு உடையவர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரு சூப்பர் ஸ்டார்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். விஜய் திரைப்படத்தில் தான் அவர் சூப்பர் ஸ்டார். அரசியலில் இல்லை.
காங்கிரசின் அடிமை திமுக
திமுகதான் காங்கிரஸிடம் அடிமையாக இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனியாகத்தானே நின்றோம்.
அடிமையாக இருந்திருந்தால் கூட்டணியில் இருந்திருப்போமே. ஸ்டாலினுக்கு பேச வேறு எதுவும் இல்லை.
1999 நாடாளுமன்றத் தேர்தலின் போது இவர்கள் கூட்டணி அமைத்திருந்தார்களே. அவர்கள் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும்.
நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமையா?, இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
============