

வலுப்பெறும் அதிமுக கூட்டணி
Edappadi Palanisamy About OPS and Sasikala : அதிமுக கூட்டணியில் பாஜக ஏற்கனவே இடம்பெற்று இருக்கிறது. அன்புமணி தலைமையிலான பாமகவும் அதிமுக கூட்டணியில் முறைப்படி இணைந்து விட்டது. மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
இணைப்பு முயற்சியில் பாஜக
அதிமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை பாஜகவே மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு
கடந்த 5ஆம் தேதி திருச்சிக்கு வருகை தந்த அமித் ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். அடுத்த இரு தினங்களிலேயே, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், அன்புமணி தரப்பு பாமக இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை
இந்தநிலையில், நேற்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது, தேமுதிகவின் நிலைப்பாடு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமமுக குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
அதிமுக தான் தலைமை
இந்தநிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை
ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் அவர் உறுதிப்பட கூறினார். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்
அதே சமயம், டிடிவி தினகரன் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கேள்விக்கு ஈபிஎஸ் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்த ஈபிஎஸ், தொகுதி பங்கீடு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி
நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தி, அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
=============