

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் தனது பரப்புரையை நிறைவு செய்தார். மார்ச் 25ல் சென்னை மைலாப்பூரில் பிரசாரத்தை துவங்கிய அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அனைவரும் வாக்களிப்போம்
பரப்புரையை நிறைவு செய்ததை தொடர்ந்து, வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில், “ வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். எனவே ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே ஒரு குடும்பத்தின் அதிகார பசிக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மக்களை போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.
அராஜக ஆட்சி - முடிவு கட்டுவோம்
உயர்கல்வித்துறையை சீரழித்து விட்டனர். கஞ்சா மற்றும் போதைப்பொருள் அராஜகம் அதிகரித்து விட்டது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
நீர்நிலைகளை மீட்டெடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, அம்மா உணவகம், அம்மா மினி க்ளினிக் என பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற இருக்கின்றோம்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்
தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி சின்னங்களான குக்கர் சின்னம், இரட்டை இல்லை சின்னம், தாமரை சின்னம்,
மாம்பழம் சின்னம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து எங்களை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என அந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
===============