
பேரவையில் கரூர் சம்பவம் விவாதம்
EPS Speech on Karur Stampede in TN Assembly : தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
கரூர் சம்பவம், அரசுக்கு கேள்வி?
இதற்குப் பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
காவல்துறை, உளவுத்துறை என்ன செய்தன
அப்போது அவருக்கு கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறை, உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தால், அசம்பாவிதம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.
அதிமுகவுக்கு மறுப்பு, தவெகவுக்கு அனுமதி
வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று காரணம் கூறப்பட்டது. எங்களுக்கு அப்படிச் சொல்லிவிட்டு தவெகவுக்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி?. அதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.
மேலும் படிக்க : கரூர் சம்பவம், சிபிஐ விசாரணை : ஒருநபர் ஆணையம், SIT விசாரணைக்கு தடை
திமுக அரசு மீது சந்தேகம்
அதேபோல், ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி. உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?” எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு முதல்வர் பேச வேண்டும். ஆனால் சட்டசபையில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது. கரூர் விவகாரத்தில் முதல்வர் கூறியதற்கும், சட்ட ஒழுங்கு ஏடிஜிபி கூறியதற்கும் முரண்பாடு உள்ளது” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
----