
கனவு காண்கிறார் ஸ்டாலின் :
தமிழக சுற்றுப் பயணத்தின் முக்கிய கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 100 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து இருக்கிறார். அரக்கோணத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், “ திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கனவு காண்கிறார். அரக்கோணத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், இந்த கூட்டமே வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம். திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதங்கள் முடிந்து விட்டது.
திட்டங்கள் எங்கே போனது? :
அரக்கோணத்துக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டு வந்தார்களா? தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றை பட்டியலிட்டு சொல்கிறேன்.
காற்றில் பறந்த வாக்குறுதிகள் :
நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி. அரக்கோணத்திலாவது உங்கள் ரகசியத்தைச் சொல்லுங்கள். ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார், போட்டோ ஷூட் எடுப்பார், குழு போடுவார், அவ்வளவுதான்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ;
சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போனது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழக போலீசார் இப்போது ஏவல்துறையாக மாறிவிட்டனர். இன்று இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது. காவல்துறையினர் எங்கே? ஆனால், ஸ்டாலின் நடத்தும் கூட்டத்திற்கு மட்டும் 2 ஆயிரம் காவலர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
விஜய்க்கும் எம்ஜிஆர் தேவை :
இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நம் தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். ஆக வரும் தேர்தல் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் ஸ்டாலின் வந்திருக்கிறார். வீடுவீடாக அதிகாரிகள் வருகிறார்கள்.
மக்களை சந்தித்தாரா ஸ்டாலின்? :
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து மனு ஸ்டாலின் வாங்கினார். தீர்வு காணப்படும் என்றார், தீர்வு காணப்படா விட்டால் கோட்டையில் கதவு திறந்திருக்கும், என்னை வந்து சந்திக்கலாம் என்றார், சந்தித்தாரா? அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.