
பொறியியல் படிப்பில் சேர, 2 லட்சம் இடங்கள் :
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேரலாம். அதன்படி, 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன.
2025-26ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் விண்ணப்பங்கள் மே மாதம் 7 முதல், ஜூன் 6ம் தேதிவரை பதிவேற்றம் செய்யப்பட்டது.
பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் :
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 11ம் தேதி 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
பொறியியல் படிப்பு - 2.41 லட்சம் பேர் தகுதி :
இதன்படி பொறியியல், பி.டெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளவர்கள் 2,41,641 பேர். அவர்களில் 2,39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2,342 பேர் தொழிற் கல்வியின் கீழும் தகுதி பெற்றுள்ளனர். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மாணவ, மாணவியரின் தரவரிசை பட்டியலை ஜூன் 27ம் தேதி வெளியிடப்பட்டது. 144 மாணவ, மாணவியர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தனர். இவர்களில் 139 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள்.
பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் :
இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 26ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.
======