

தமிழக சட்டசபை தேர்தல் களம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், திமுக எம்பி ஆ. ராசா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் திமுகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆ. ராசா ஆடியோ விவகாரம்
2ஜி விவகாரம், கருணாநிதி, ஸ்டாலின், கனிமோழி, திமுக தொலைக்காட்சி குறித்து ஆ.ராசா முன்வைத்துள்ளதாக கூறப்படும் விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தில் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டு இருக்கிறது.
எடப்பாடி சரமாரி கேள்வி?
கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இந்த ஆடியாவை முன்வைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
’‘2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கனிமொழியும், ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயிலில் இருந்த ஆ.ராசா ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில், திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ராசாவுக்கு காட்டவில்லை.
திமுகவில் சாதிய பாகுபாடு
சமூக நீதி பேசும் திமுகவில் சாதியப் பாகுபாடு இருக்கிறது. கலைஞர் டிவிக்கு பணம் போனதை ஒப்புக்கொள்கிறார்.
கருணாநிதியின் இறுதிக் காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாகத்தான் வைத்திருந்தார் என்று ராசா கூறுகிறார்.
கனிமொழி போட்டியிட வாய்ப்பு தரவில்லை
கருணாநிதியின் இறுதிகாலத்தில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது அதனால்தான் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை என்கிறார்.
ஆ. ராசா மூலம் உண்மை!
கனிமொழியை ஸ்டாலின் ஒருநாளும் நம்ப மாட்டார், என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ளமுடியாது என்று ஆ. ராசா பேசியிருக்கிறார். உண்மை செய்தி ராசா மூலம் வெளியில் வந்துவிட்டது.
திமுகவினரிடம் பதில் இருக்கா?
திமுகவின் இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுகிறார்’ என்று ராசா பேசியிருக்கிறார். இதற்கு திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி வினவினார்.
====