
தமிழகத்தை நெருங்கும் தாழ்வுப்பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் தீவிரம் அடைகிறது. இது தமிழகம், புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வட தமிழகம், தெற்கு ஆந்திராவில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பெரும் இழப்பு
தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் 22 சதவீதம் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு
தஞ்சாவூர் அருகே காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மூர்த்தியம்பாள்புரம் நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு, விவசாயிகளிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நானும் ஒரு விவசாயி தான். அதனால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு அனைத்தும் தெரியும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது, எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக அமைந்து விட்டது” என்று குற்றம்சாட்டினார்.
==================