

சட்டப்பேரவை கூட்டத்தொடர்
சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.
அதிமுக வெளிநடப்பு
அதற்கு அடுத்தநாள், மேகதாது அணை விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இன்று காலை அவை கூடியதும், மேகதாது அணை விவகாரத்தை கிளப்பிய அதிமுக அமளியில் ஈடுபட்டதோடு, வெளிநடப்பும் செய்தது.
விதிகளுக்கு புறம்பாக இடைச்செருகல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ தமிழக அரசு விதிகளுக்குப் புறம்பாக, முதலமைச்சரின் பதிலுரையில் ஒரு திருத்தத்தை இடைச்செருகலாகத் தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டமன்ற விதிகளின்படி ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்கென அரசு தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும். 18-06-2026 அன்றே அதுகுறித்த நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது.
அதன் அடிப்படையில், சட்டப்பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று முதலமைச்சர் அந்த அரசு தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது விவாதமும் நடைபெற்றது.
விவாதம் முடிந்த பிறகு முதலமைச்சர் ஆற்றிய பதிலுரையில்தான், இந்த இடைச்செருகல் திருத்தத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். இது முற்றிலும் விதிகளுக்குப் புறம்பானது.
உரிமைப் பிரச்னை - அனுமதி இல்லை
விதிமுறைகளின்படி அவர்கள் சட்டமன்றத்தில் இந்தத் திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்சினை எழுப்பினோம்.
ஆனால், அதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
காவிரி நதிநீரை நம்பித்தான் தமிழகத்தில் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் உள்ளது.
மீண்டும் நடுவர் மன்றம் அவசியமா?
ஏற்கனவே காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் இதுகுறித்து ஒரு நிலையான இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டன. அப்படித் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று இந்த அரசு கேட்பது எந்த நோக்கத்திற்காக?
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 15 ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு
கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலமான கர்நாடகா காவிரி நீரைத் தடுக்கவோ, தேக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மீண்டும் இந்த இடைச்செருகல் திருத்தத் தீர்மானத்தை இந்த அரசு ஏன் கொண்டு வந்தது என்ற விளக்கத்தைப் பெறுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்சினையைக் கொண்டு வந்தோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
=============