

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டு, 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் நிறைவு
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேட்சைகள் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்ந வகையில் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்றது.
முக்கிய பிரமுகர்கள் மனுத்தாக்கல்
கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்...
திமுக அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.
4 ஆயிரம் மனுக்கள் தாக்கல்?
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பரிசீலனை செய்வார்கள். ஏற்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரம் வெளியிடப்படும்
திரும்பப்பெற 9ம் தேதி வரை அவகாசம்
வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்.9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
ஏப். 10 முதல் பூத் சிலிப்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னங்களைப் பொருத்தும் பணிகள் ஏப்ரல்10ம் தேதி முதல் தொடங்க உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசாரம் செய்ய ஏப்.21 கடைசிநாள்
தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 21ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
அது முதல் தேர்தல் நாளான ஏப்.23 மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் வரையிலான 48 மணி நேரம் அமைதி காலமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த கால கட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவும், தொலைக்காட்சிகளை வைத்து காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
75,000 வாக்குச்சாவடிகள்
வாக்குப்பதிவுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து விதமானதொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் அன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
===================