
சென்னையில் பொது போக்குவரத்து :
Integrated public transport ticketing App launched in Chennai :
இந்தியாவில் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில், பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் என பொது போக்குவரத்தினை மக்கள் பயன்படுத்தி வருகின்றன. பொது போக்குவரத்தில் ஒன்றில் இருந்து மற்றொன்றை பயன்படுத்தும் போது, தனித்தனியாக் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டி இருக்கிறது. ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால், அதற்காக காத்திருக்க வேண்டியும் உள்ளது.
ஒரே ஆப்பில் பொது போக்குவரத்து :
எனவே, மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரே ஆப்பில் பயன்படுத்தும் வகையில் நாட்டிலேயே முதல்முறை மொபைல் ஆப் ஒன்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு Chennai One எனப் பெயரிடப்பட்டுள்ளது. CUMTA எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு இந்த வசதியை செய்துள்ளது.
கூடுதல் வசதியை வழங்க நடவடிக்கை :
இதன் முக்கிய நோக்கம் பயண நேரத்தை குறைப்பது, பயண செலவுகளை குறைப்பது, நம்பகத்தன்மை வாய்ந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவது, பல்வகை பொதுப் போக்குவரத்தை ஒருங்கிணைப்பது, பயணத் திட்டமிடல் மேலாண்மையை ஊக்குவிப்பது ஆகியவை ஆகும். சென்னையில் இந்த புதிய ஆப் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். .
Chennai One மொபைல் ஆப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம் :
1. மொபைல் ஆப்பை ஓபன் செய்ததும் முகப்பு பக்கத்தின் கீழ் Bus OTP, Bus QR, Bus Ticket என நீல நிறத்தில் பட்டன் போன்ற ஒரு ஆப்ஷன் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்தால் ஸ்கேன் செய்வதற்கான வசதி, OTP பயன்படுத்துவதற்கான வசதி ஆகியவை காண்பிக்கப்படும்.
பேருந்தில் ஏறினால் Chennai One மொபைல் ஆப்பை பயன்படுத்தும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
அதில் 5 இலக்க OTP ஒன்று இடம்பெற்றிருக்கும். இதன் கீழ் கியூ.ஆர் கோடு ஒன்றும் இருக்கும். OTPஐ மொபைல் ஆப்பில் பதிவிட்டால் எந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்து என்பதை காட்டும். அதில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தை புறப்படும் இடமாக எடுத்துக் கொண்டு, அடுத்தடுத்த நிறுத்தங்களை காண்பிக்கும்.
எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ, அதை தேர்வு செய்தால் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப்ஷனுக்கு செல்லும். எத்தனை டிக்கெட் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொண்டு, Book Bus பட்டனை கிளிக் செய்தால் கட்டணம் செலுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லும்.
இதில் CUMTA UPI மற்றும் கூகுள்பே, போன்பே மற்றும் நீங்கள் மொபைலில் வைத்திருக்கும் இதர யுபிஐ ஆப்களை காண்பிக்கும்.
அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பின் கோடு போட்டு கட்டணத்தை எளிதாக செலுத்திவிடலாம். பின்னர் ஆப்பிலேயே டிக்கெட் காண்பிக்கும். இதை நடத்துநரிடம் காண்பித்தால் போதும்.
புறநகர் ரயில், மெட்ரோ, கேப் புக்கிங் - லைவ் லொகேஷன் வசதி
இதுதவிர புறநகர் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயில் சேவை, கேப் அல்லது ஆட்டோக்கள் முன்பதிவு செய்யும் வசதிகளும் இருக்கின்றன. முன்பதிவு செய்ததும் சம்பந்தப்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனம் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை காண்பிக்கும்.
அதற்கேற்ப பயணத்திற்கு தயாராகி கொள்ளலாம். இந்த புதிய வசதி மூலம் நிறைய ஆப்களை மொபைலில் டவுன்லோடு செய்து வைத்திருப்பதை தவிர்க்கிறது. Chennai One ஒரே ஆப் மட்டும் இருந்தால் போதும். பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என எதில் வேண்டுமோ, முன்பதிவு செய்து எளிதாக பயணத்தை தொடங்கி விடலாம். இந்த வசதி சென்னையில் பொது போக்குவரத்தை பயன்படுத்தவோருக்கு பெரும் உதவியாக அமையும்.
==================