

சி. விஜயபாஸ்கர்
டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய பிரமுகராக திகழ்ந்தவர் சி. விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், ஜெயலலிதா, எடப்பாடி அமைச்சரவையில் பொறுப்பு வகித்து திறம்பட பணியாற்றியவர்.
விராலிமலை - விஜயபாஸ்கரின் கோட்டை
விராலிமலை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் சி. விஜயபாஸ்கர். கடந்த தேர்தலில் தவெகவின் ஆதிக்கம் இருந்தாலும், அனைத்தையும் முறியடித்து விராலிமலை வெற்றி வாகை சூடினார் விஜயபாஸ்கர்.
எடப்பாடி மீது அதிருப்தி
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த 25 எம்எல்ஏக்கள், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா
நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
சமாதான பேச்சுவார்த்தை
சமாதான பேச்சுவார்த்தை பிறகு, எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடியின் தலைமையை ஏற்றனர். அதேசமயம், அந்த அணியில் இருந்த சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் எடப்பாடியை சந்திப்பதை தவிர்த்தனர்.
பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியை தெரிவித்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவில் இருந்தும் வெளியேறினார்.
அதிமுகவில் இருந்து வெளியேறிய சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைவார் என பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில், அவர் கடந்த சில தினங்களாக அமைதி காத்து வந்தார். இதனால், அவர் திமுகவிற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
என். ஆனந்துடன் விஜயபாஸ்கர் சந்திப்பு
இந்தநிலையில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் சி. விஜயபாஸ்கர்.
தவெகவில் விஜயபாஸ்கர்
அதன் அடிப்படையில் வரும் திங்கட்கிழமை 29ம் தேதி தவெகவில் இணைகிறார் விஜயபாஸ்கர்.
சென்னையில் இணைப்பு விழா
சென்னை, திருவாண்மியூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இணைவு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சியில் தன்னோடு சேர்த்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களையும் அவர் தவெகவில் இணைக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு?
செங்கோட்டையனுக்கு எப்படி கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவி தரப்பட்டதோ, அதேபோன்று, விஜயபாஸ்கருக்கு டெல்டா மாவட்ட பொறுப்பாளர்கள் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிட சி. விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, தலைவர் விஜய் முடிவு எடுப்பார் என தவெக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
====================================