

சட்டமன்ற தேர்தல் அதிமுக தோல்வி
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவில் களேபரத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒருபுறம் தேர்தல் தோல்வி, மறுபுறம் அதிருப்தியாளர்களின் எதிர்ப்பு என இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறார், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இரண்டாக உடைந்த அதிமுக
விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி தரப்பை சேர்ந்த 22 பேர் எதிராக வாக்களிக்க, வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்புல 25 பேர் ஆதரவாக வாக்களித்தார்கள். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.
தகுதிநீக்க ஆபத்தில் வேலுமணி தரப்பு
மூன்றில் இரண்டு பங்கு பேர் வெளியேறாததால், வேலுமணி தரப்புக்கு தகுதி நீக்க ஆபத்து காத்திருக்கு. சபாநாயகரிடம் இருதரப்பும் மனு கொடுத்து இருந்தாலும், எடப்பாடி அணி, நீதிமன்ற படிக்கட்டை ஏறினால் சிக்கல்தான்.
25 தொகுதிகளில் இடைத்தேர்தல்?
நீதிமன்ற உத்தரவுப்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டால், 25 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால், அது யாரை பாதிக்கும் என்பது முடிவுகளை பொருத்து தான் இருக்கும்.
தவெகவிற்கு 107 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 11 பேரின் ஆதரவு தேவை. இடைத்தேர்தலில் அந்தக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றவும் வாய்ப்பு இருக்கிறது.
செம்மலை அதிரடி முடிவு
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த அடியாக, கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான செம்மலை தனது பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளார்.
அதிமுக நிகழ்வுகளால் வேதனை
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கிவிட்டது.
இதே மனநிலையில் தான் இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கம்
நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதா காப்பாற்றிய இந்த இயக்கத்திற்கு இந்த கதியா?
கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா!
கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா! நோகுதய்யா மனசு நோகுதய்யா என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும். "உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது" என பிரபல ஆங்கில் நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.
தலைவர்களை மதித்து பயணித்தேன்
புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள்.
அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்பட வேண்டும் என்ற சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
வாய்ப்புகள் மறுப்பு, அமைதி காத்தேன்
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு , எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. அதை பற்ரி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
அதிமுகவில் பயணிக்க விரும்பவில்லை
இப்போது உருவாக்கியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிற போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது.
நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று செம்மலை கூறியுள்ளார்.
யார் இந்த செம்மலை?
முன்னாள் அமைச்சர் எஸ். செம்மலை தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அதிமுகவின் முக்கிய ஆளுமை. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மக்கள் மத்தியிலும் கட்சிக்குள்ளும் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்.
ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்
2001ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை (Health Minister) மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
மக்களவை எம்பியாக பணி
2009 முதல் 2014 வரை சேலம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டு, டெல்லியில் அதிமுகவின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தார்.
தற்காலிக சபாநாயகர்
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை நடத்துவதற்காகத் தற்காலிக சபாநாயகராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு அப்பணியைச் சிறப்பாகச் செய்தார்.
சுயேச்சையாக செம்மலை வெற்றி
1980ம் ஆண்டு தான் சந்தித்த முதல் தேர்தலில் தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றார். இது அவரது தனிப்பட்ட செல்வாக்கைக் காட்டியது.
எம்எல்ஏவாக செம்மலை
அதிமுகவில் இணைந்த பிறகு 1984ல் அதே தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் வென்றார்.
2001ல் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் வென்று தமிழக அமைச்சரானார்.
2009ல் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக (MP) தேர்வானார்.
201ல் மேட்டூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுகவில் முக்கிய பொறுப்புகள்
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்துள்ள செம்மலை, சேலம் மாவட்ட அரசியலில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.
============================