

ஈரான்,இஸ்ரேல், அமெரிக்க போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு
Annamalai on LPG Gas Cylinder Stopped in India : ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இதனால் எண்ணெய் கப்பல்கள் கடலிலேயே நங்கூரமிடப்பட்டு உள்ளது. இந்த போர் சூழல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மாநில, மத்திய அரசுக்கு கோரிக்கை
இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நிலைமையை சரிசெய்ய தேவையான முன்னேற்பாடுகளை செய்ய மாநில, மத்திய அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
அந்த வகையில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சமையல் எரிவாயுவை பொருத்தவரை நமக்கு வரவேண்டிய எல்.பி.ஜி. எரிவாயு சவுதி அரேபியாவில் இருந்துதான் வருகிறது.
அதிலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், கப்பல் போக்குவரத்து மூலமாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்
போர் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதால், கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் கப்பல்கள் இந்தியாவிற்கு வர முடியாத அசாதாரண சூழல் நிலவுகிறது.
பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி
ரஷ்யா, கத்தார் போன்ற நாடுகளில் இருந்து இருந்து மத்திய அரசு பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்தாலும் கூட, சவுதி அரேபியாவில் தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
அதனால் எப்போது போர் சூழல், இயல்பு நிலைக்கு திரும்பி நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கப்பல்கள் இந்தியாவிற்கு வருகிறதோ அப்போது தான் எரிவாயு சிலிண்டர் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
சிலிண்டர் புக்கிங் 21-ல் இருந்து 25 நாளாக மாற்றம்
தொடர்ந்து அவர் பேசும் போது, சமையல் எரிவாயு புக்கிங் நடைமுறையில் முன்பதிவு செய்ய 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் நமது நோக்கமானது வீட்டு உபயோக சிலிண்டர் தடையின்றி கிடைக்க வேண்டும்.
மக்கள் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல் அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும், வணிக சிலிண்டரும் தடையின்றி கிடைக்க வேண்டும்.
மக்கள் அச்சப்பட தேவையில்லை
மேலும், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது, சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார். மேலும் தவறான தகவல்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாஜக ஆட்சியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரிப்பு
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இப்போது வரை எரிவாயு சிலிண்டர் பயன்பாடு 14 கோடியில் இருந்து தற்போது 33 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டை விட 2026 ஆம் ஆண்டில் சிலிண்டர் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.