
திருப்பதி ஏழுமலையான் கோவில் :
இந்தியாவில் உள்ள புகழ்மிக்க கோவில்களில் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலும் ஒன்று. இங்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை சேவித்து செல்கிறார்கள் விடுமுறை, பண்டிகை நாட்கள் என்றால் மலையப்ப சுவாமியை வழிபட பல மணி நேரம் அல்ல, பல நாட்கள் என்பது சாதாரணம்.
சந்திர கிரகணம் :
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் அறிவியலின் படி வான்வெளியில் நடக்கக்கூடிய அற்புத நிகழ்வுகள் ஆகும். சோதிடத்தின் படி கிரகணம் என்பது ஒரு அசுபமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே, பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனின் ஒளி, சந்திரன் மீது விழுவதை பூமி தடுப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வு ஆகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் செப்டம்பர் 7ம் தேதி நிகழ இருக்கிறது.
கோவில் நடைகள் அடைப்பு :
பொதுவாக கிரணங்கள் நிகழும் போது கோவில் நடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அதாவது, பாரம்பரியப்படி, கிரகணம் தொடங்கும் 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் மூடப்படும். எனவே செப்டம்பர் 7ம் தேதி மதியம் 3.30 மணிக்கே திருப்பதி ஏழுமலையான் கோவில் வாசல்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பதி கோவில் மூடல் :
சந்திர கிரகண நிகழ்வு நிறைவடைந்த பிறகு, செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவசனம் போன்றவே நடைபெறும். பின்னர் காலை 6 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் தொடங்கும்.
சந்திர கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும் :
செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்களுக்கு, பொட்டலங்கள் மூலம் உணவு வழங்கப்படும். பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் உணவு விநியோகிக்கப்படும். எனவே, பக்தர்கள் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தங்கள் யாத்திரையைத் திட்டமிட்டு கொள்ள வேண்டும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
==============