

பாரம்பரிய சின்னங்கள் :
Gingee Fort in UNESCO World Heritage Site : யுனெஸ்கோ எனப்படும் ஐநா சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு, பாரம்பரிய சின்னத்தின் சரித்திர காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், மஹாராஷ்டிராவில் உள்ள மராத்திய கோட்டைகள் கொண்ட நிலப்பரப்புகளில் உள்ள வரலாற்று இடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த தகவலை யுனெஸ்கோ அமைப்பு உறுதி செய்தது.
மராத்தியர்கள் கட்டிய கோட்டைகள் :
இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யுனெஸ்கோ(UNESCO) உலக பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில், மஹாராஷ்டிரா ராணுவ நிலப்பரப்புகளின் கீழ் வரும் சல்ஹெர், சிவனேரி, லோஹ்காட், கண்டேரி, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா, விஜய் துர்க், சிந்துதுர்க் கோட்டைகள் இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்பு மிக்க செஞ்சிக் கோட்டை :
தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டையும்(Gingee Fort) உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ள இந்தக் கோட்டை, மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட வலிமை வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது.
இயற்கை அரண் கொண்ட செஞ்சி :
ஆங்கிலேயர்கள் இதனை "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்து முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக் கோட்டை(Gingee Fort). பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
தீரம்மிக்க தேசிங்கு ராஜா :
இந்தப் பகுதியை ஆட்சி செய்த தேசிங்கு ராஜா, ஆற்காடு நவாப்பின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்து கப்பம் கட்ட மறுத்தார். இதன் காரணமாக 1714ம் ஆண்டு ஆற்காடு நவாப் செஞ்சிக்கொட்டை(Gingee Fort) மீது படையெடுத்தார். இந்தப் போரில் தீரத்துடன் நின்ற 18 வயதேயான தேசிங்கு, புறமுதுகிட்டு ஓட விருப்பமின்றி, தனது வாளை வானை நோக்கி எறிந்து, அதை மார்பில் ஏந்தி வீரமரணம் அடைந்தார்.
சர்வதேச அங்கீகாரம் - பிரதமர் மகிழ்ச்சி :
பாரம்பரிய சின்ன அங்கீகாரம் கிடைத்து இருப்பது பற்றி பிரதமர் மோடி(PM Modi Tweet) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்த கவுரவத்தால் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மராத்தியர்களால் உருவாக்கப்பட்ட 12 அற்புதமான கோட்டைகள் உள்ளன. அவற்றில் 11 மஹாராஷ்டிராவில் உள்ளன. ஒன்று தமிழகத்தில் உள்ளது. சிறப்பு மிக்க இந்த கோட்டையை பார்வையிட்டு, மராத்திய பேரரசின் பெருமை மிகுந்த வரலாறு பற்றி அறிய நான் அனைவரையும் கேட்டு கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.
=====