"ஆட்சியில் பங்கு, நடுநிலை கிடையாது" : காங்கிரஸ் மீண்டும் பிடிவாதம்! : மே 4க்கு பின்பு திமுகவுக்கு நெருக்கடி?

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இன்றி, நடுநிலை மட்டுமே இனி காங்கிரஸ் வகிக்காது என்று, கிரிஷ் சோடங்கர் புயலை கிளப்பி இருக்கிறார்.
Girish Chodankar stirred up storm that Congress will seek a share in the governance
Girish Chodankar stirred up storm that Congress will seek a share in the governancegoogle
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் வரலாறு காணாத வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முடிவில் இறங்கியது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முயற்சியால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.

அதிகாரத்தில் பங்கு வேண்டும்

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் காங்கிரஸ் மீண்டும் தனது கோரிக்கையை கையில் எடுத்து இருக்கிறது. தேர்தல் முடிவை பொறுத்து முக்கிய முடிவை எடுப்போம். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துடன் தான் இருப்போம். இனி நடுநிலை வகிக்க மாட்டோம் என்று கிரிஷ் சோடங்கர் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி அந்தஸ்து அவசியம்

காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். "தமிழகத்தில் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சி, அதிகாரம் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில் தான் இருக்கும். இனி அதிகாரமற்ற நிலையில் இருக்க மாட்டோம். நடுநிலையாக அங்கம் வகிக்க மாட்டோம்.

நிர்வாக அமைப்புகள் மாற்றம்

மே 4 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கட்சியின் நிர்வாக அமைப்புகள் மாற்றியமைக்கப்படும். அதிமுக வலுவாக உள்ள இடங்களில் எல்லாம் அந்தக் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது.

ஏற்கனவே வென்ற இடங்களை தக்க வைப்பதற்கும், புதிய இடங்களை கைப்பற்றுவதற்கும் காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளது.

காங்கிரஸ் செயல்பாடு தீவிரமாக இருக்கும்

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வென்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி. காங்கிரசுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக களத்தில் இறங்க போகிறோம்.

கிராம அளவிலான கமிட்டி, பூத் கமிட்டி போன்ற கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டோம்.

உள்ளாட்சி தேர்தலில் வலுவான போட்டி

உள்ளாட்சி தேர்தலில் வலுவான போட்டியை கொடுக்க திட்டமிட்டுள்ளோம். தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம். தேர்தல் முடிவுக்கு பிறகு எங்கள் உரிமைகளை கேட்டு பெறுவோம்.

எங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆட்சியில் பங்கு அல்லது எதிர்கட்சி என்று முடிவு செய்தால் தான் கட்சியை வளர்த்த முடியும்" என்று கிரிஷ் சோடங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு நெருக்கடி?

தேர்தலில் ஒருவேளை திமுக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற வேண்டி இருந்தால், அப்போது ஆட்சியில் பங்கை காங்கிரஸ் கேட்டு பெறும் எனத் தெரிகிறது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in