

விவசாய பயிர்க்கடன்கள்
தமிழ்நாட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன்களை பெறுகின்றனர். அவ்வப்போது இந்த கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்கிறது.
ஜூன் மாதம் பயிர்க்கடன்கள் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகள் மூலம் 2025 மே 1 ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, 28.02.2026 அன்று நிலுவையில் இருந்த 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகளின் ரூ. 5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
அதனையடுத்து, தகுதியான 13,34,273 விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரூ. 5,267.83 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
ரூ. 75,000 வரை பயிர்க்கடன் விரிவாக்கம்
இதன் பின்னர், ஆகஸ்ட் 17 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை விரிவுபடுத்தி முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
அதன்படி, ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். ரூ. 75,001 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 75,000 தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ரூ.75,001 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற 2,38,264 விவசாயிகளுக்கு கூடுதலாக தலா ரூ.40,000 வழங்க ரூ.953 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை தள்ளுபடி
இந்நிலையில், பல்வேறு விவசாயிகள் சங்கம் முன் வைத்த கோரிக்கைகளை குறித்து கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பயிர்க்கடன் காலவரையறையை கூடுதலாக ஒரு மாதத்திற்கு உயர்த்தவும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, 01.05.2025 முதல் 31.03.2026 வரை பயிர்க்கடன் பெற்று, 31.03.2026 அன்று நிலுவையில் இருந்த உத்தேசமாக 15,54,762 குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளின் ரூ. 15,471.63 கோடி பயிர்க்கடன்களில் உத்தேசமாக 13,24,882 விவசாயிகளின் ரூ. 8,312.21 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடிக்கு தகுதிப் பெற்றுள்ளன.
இதன்படி, பயிர்க்கடன் பெற்ற அனைவருக்கும் ரூ. 75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற 5,90,621 விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதுமாகவும், அதற்கு மேல் பெற்ற பயிர்க்கடன் பெற்ற 7,34,260 விவசாயிகளுக்கு தலா ரூ. 75,000 வரையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
======================