

அரசு மருத்துவர்கள் ஊதியம்
முதல்வராக கருணாநிதி இருந்த போது, அரசு டாக்டர்களுக்கான ஊதிய உயர்வு சம்பந்தமான அரசாணை 354 வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் இது செயல்படுத்தவில்லை. இதனால் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அரசு டாக்டர்கள் ஊதியம் குறைவாக இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் டாக்டர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை அமல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தியும் அரசு டாக்டர்களுக்கான கூட்டமைப்பு சார்பில், 2019ம் ஆண்டு சென்னையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், போராட்டம் நடத்திய டாக்டர்களை நேரில் சந்தித்தார்.
டாக்டர்களுக்கு திமுக வாக்குறுதி
அடுத்து திமுக ஆட்சி தான் அமையும். அப்போது உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன். எனவே, சாகும்வரை போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதைநம்பி டாக்டர்களும் போராட்டத்தை கைவிட்டனர். 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தங்கள் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும் என்று மருத்துவர்கள் காத்திருக்க அதற்குள் ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
அரசுக்கு டாக்டர்கள் நினைவூட்டல்
திமுக ஆட்சி முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையிலும், டாக்டர்களின் கோரிக்கை மட்டும் இன்றுவரை நிறைவேறிய பாடில்லை.
இந்நிலையில், 'ஸ்டாலின் எங்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 'ஆனால், கோரிக்கைகள் தான் நிறைவேற்றப்படவில்லை. அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்' எனக்கூறி, அரசு டாக்டர்கள் சமூக வலைதளங்களில், அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் கோரிக்கையை நினைவு கூர்ந்துள்ளனர்.
இதைப் பார்த்தாவது முதல்வர் ஸ்டாலினும், திமுக அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் டாக்டர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
=====