”முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்” : திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் : விளக்கம் தர அறிவுறுத்தல்.!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பற்றி முதல்வர் விஜய்யிடம் ஆளுநர் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளார்.
Governor Arlekar soughtreport from Chief Minister Vijay regarding Thiruparankundram matter
Governor Arlekar soughtreport from Chief Minister Vijay regarding Thiruparankundram mattersource:thamizhalai,ai generated
1 min read

தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு

கார்த்திகை தீபத்தை ஒட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே அமைந்துள்ள பழமையான கல்தூணில் இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அண்மையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

தீப மண்டபத்தில் தீபம் ஏற்றம்

இருப்பினும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வரும் ஆகம விதிகள் மற்றும் பாரம்பரிய வழக்கப்படி, உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

முதல்வரிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளக்கம் கேட்டுள்ள ஆளூநர்

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக நிறைவேற்றியதா? என்றும், சட்டம் - ஒழுங்கு சிக்கல்கள் குறித்தும் விளக்கமான தகவல்களை அவர் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி இந்த அறிக்கையை ஆளுநர் கேட்டிருப்பதாகவும், தமிழக அரசு வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தெரிகிறது.

கோவில் நிர்வாகம் விளக்கம்

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது குறித்து கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

"வரலாற்று தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானீகர்கள் கருத்துகளின் அடிப்படையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்தானீக பட்டர்கள் மறுப்பு

ஆனால், அறங்காவலர் குழுவின் இந்த விளக்கத்திற்கு கோயில் ஸ்தானீக பட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அறங்காவலர் குழு வெளியிடப்பட்ட கடிதத்தில் தங்களது பெயர்களும் சேர்க்கப்பட்டிருப்பது மனவேதனை அளிப்பதாக ஸ்தானீக பட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள், திருக்கோவில் நிர்வாக அதிகாரி (துணை ஆணையர்), அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "2026 கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்தவொரு கடிதத்தையும் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கவில்லை.

உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாகக் கடந்த ஆண்டே தபால் மூலம் எங்கள் விளக்கத்தை அளித்துள்ளோம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எங்களைக் கலந்தாலோசிக்காமல் எங்கள் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் எம். சுவாமிநாதன், சி.பாலசுப்பிரமணிய பட்டர் உள்ளிட்ட 4 பேர் கையொப்பமிட்டு தங்கள் தரப்பு விளக்கத்தை பதிவு செய்துள்ளனர்.

==================