

Has property tax been hiked? Chennai Corporation Commissioner G.S. Sameeran clarifies!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி திடீரென 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
சமீரன் ஐ.ஏ.எஸ் விளக்கம்
இந்நிலையில், பொதுமக்களின் இந்த அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களின் குற்றச்சாட்டுகளும் அதிருப்தியும்
சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய் ஆதாரமாக சொத்து வரி விளங்கி வருகிறது. இந்த வருவாய் மூலமே குப்பை அகற்றுதல், தெருவிளக்குகள் பராமரிப்பு, சாலைகள், பூங்காக்கள் பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புப் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
இருப்பினும், எந்தவித முன்னறிவிப்பும் மின்றி திடீரென சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
அண்ணா நகர் சம்பவம்
இந்த நிலையில் அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்திய ஒரு கட்டிடத்திற்கு, இந்த ஆண்டு ரூ. 28,000 சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளப் புகார்கள்
மேலும் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தின் பின்னூட்டங்களில் மக்கள் தங்கள் புகார்களைப் பதிவிட்டனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை வாங்கி, கடந்த அரையாண்டில் ரூ. 4,480 வரி செலுத்திய நிலத்திற்கு தற்போது ரூ.11,330 (சுமார் 250% உயர்வு) வரை வந்துள்ளதாகப் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநகராட்சி ஆணையர் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கம்
பொதுமக்களின் குழப்பங்களுக்குப் பதிலளித்து ஆணையர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுவான சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. தவறான அல்லது குறைவான மதிப்பீட்டில் வரி செலுத்தி வந்த கட்டிடங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது."
முரண்பாடுகள் கண்டறியப்பட்டது எப்படி?
செயற்கைக்கோள் தரவுகள், பிற அரசுத் துறைகளின் தகவல்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களின் சுய விவர அறிவிப்பு (Self declaration) ஆகியவற்றின் அடிப்படையில் கட்டிடங்களின் பரப்பளவில் உள்ள முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம்!
திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அதற்கான தீர்வைக் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பைப் பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரத் துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும்.
எனவே, 'சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது' என சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
======