

Heated exchange between TVK and DMK MLAs in the Assembly; Speaker issues warning!
இஸ்லாமியர் விவகாரத்தில் எழுந்த விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ முஸ்தாபா, இஸ்லாமியர்கள் குறித்த திமுகவின் நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர், இஸ்லாமிய சமூகத்தினருக்கு திமுக அரசு செய்த நலத்திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசினர்.
சபை குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம்
இதனைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ தாகிரா எழுந்து திமுகவை விமர்சித்துப் பேசிய போது, குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "இது வேண்டாம்.. சபை குறிப்பில் இருந்து நீக்குகிறேன்" என அறிவித்தார்.
சபாநாயகர் எச்சரிக்கை
அதேநேரம், திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் வேறு இருக்கையில் அமர்ந்து உரத்த குரலில் பேசியதால், அவசியமெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார்.
உடனே திமுக கொறடா எ.வ.வேலு, வசந்தம் கார்த்திகேயனைத் அவரது சொந்த இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்களின் காரசார உரையாடல்
பின்னர் பேசிய எ.வ.வேலு, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிறுபான்மை இஸ்லாமியர் பிரச்சினை மிகவும் உணர்வுப்பூர்வமானது.
இஸ்லாமியர்களுக்கு திமுகவே பாதுகாப்பாக இருந்து வந்துள்ளது என்பதற்கு சான்றாக இங்கிருக்கும் இஸ்லாமியத் தலைவர்களே பேசியுள்ளனர்" என்றார்.
அப்போது மீண்டும் இருதரப்புக்கும் இடையே ஆவேசமான வார்த்தை மோதல்கள் எழுந்தன. பூண்டி கலைவாணன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அவையின் முன்பகுதிக்கு வந்து சபாநாயகரிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், "திமுகவினரின் இந்த உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படக்கூடிய கட்சி அல்ல தவெக.
பேரவையில் அநாகரிகமாக நடந்துகொள்வதால்தான் தமிழக மக்கள் அவர்களுக்குத் தகுந்த தீர்ப்பைக் கொடுத்து எதிரில் உட்கார வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்த அவைத் தலைவர்
அவை முன்னவர் செங்கோட்டையன் பேசுகையில், தவெக எம்.எல்.ஏ பேசியதில் தவறு இருந்தால் சபை குறிப்பிலிருந்து நீக்கலாம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து திமுக கோவி செழியன் பேசியதை அடுத்துச் சூழல் அமைதியானது.
பின்னர் மீண்டும் பேச முயன்ற தவெக எம்.எல்.ஏ முஸ்தாபாவிடம், "ஆதாரப்பூர்வமாக இருந்தால் ஆதாரத்தைக் காட்டிவிட்டுப் பேசுங்கள்" என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். முஸ்தாபா சில ஆதாரங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்ததை அடுத்து, தொகுதி சார்ந்த பிரச்சினைகளைப் பேச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
======