

தொகுதி வரையறை காரசார விவாதம்
தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில், 534 தொகுதிகளே தொடர வேண்டும் என ஏன்? முதலமைச்சர் பேசவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில்,தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் தவறான கருத்துகளையும் கண்ணோட்டத்தையும் பரப்பி வருகின்றன.
தொகுதி மறுவரையறை தீர்மானத்தின் மீதான விவாதம்
ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒருமனதான ஆதரவோடு ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
543 தொகுதிகள் தான் - தவெக
அதில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 என்ற அளவிலேயே Freeze செய்யப்பட்டுள்ளது. இதேமுறை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியிருந்தோம்.
அந்தத் தீர்மானத்தில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றிருந்தனவோ,அதிலும் தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டிலும் முதலமைச்சரும் இந்த அரசும் இன்றும் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
சட்ட அமைச்சர் விளக்கம்
சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான விவகாரங்கள் மற்றும் கவுன்சில் வரம்பிற்குட்பட்ட விஷயங்கள் குறித்து மட்டுமே விரிவாகப் பேச முடியும்.
அதில் தமிழகத்தின் உரிமைகளும் அரசின் நிலைப்பாடும் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கப்பட்டன. கூட்டத்திற்குப் பிறகு வெளியிலும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.
உடனடி செய்தியாளர் சந்திப்பு மூலம் தமிழக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.
இதன் மூலம் தொகுதி மறுவரையறை குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது மீண்டும் சட்டப்பேரவையில் தெளிவுபடுத்தப்பட்டது.
விசிக, பாமக காரசாரம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் அமைச்சர் வன்னி அரசு பேசியது பாமக உறுப்பினர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவையில் எழுந்து எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
வன்னியரசு பேச்சு
பாமக உறுப்பினர்கள் ராமதாஸ் அவர்களை காப்பாற்றுவதை விட, மோடி, அமித் ஷா ஆகியோரை காப்பாற்றுவதற்கு தான் அதிகம் மெனக்கெடுகிறார்கள் என்று அமைச்சர் வன்னி அரசு பேசினார்.
உடனே பாமக உறுப்பினர்கள் பேரவையில் எழுந்து எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
தொடர்ந்து பேசிய வன்னியரசு, சொல்வதை திசை திருப்பும் வேலையில் பாஜகவும், பாமகவும் ஈடுபடுகின்றன. மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மசோதாவில் சொல்லப்பட்டதை பற்றி பேசவில்லை. மசோதாவில் இருப்பது வேறு, அமித் ஷா பேசியது வேறு.
பாமக பதிலடி
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார், யாரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் பாமக இல்லை.
இன்னும் சொல்லப் போனால் தமிழகத்திலேயே அதிக அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தலைவர் எங்களின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தான்.
பாமகவை தடை செய்ய வேண்டும் என்று சொன்ன காலகட்டம் எல்லாம் உண்டு. அதையெல்லாம் தாண்டி தான் வந்திருக்கிறோம்.
அரசியலமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நீட்டுக்கு எதிராக வந்த தீர்ப்பிற்கு ஆதரவாக தானே நின்றோம்.
காவிரி பிரச்சினை வந்த போது பாஜகவிற்கு எதிராக தானே நிலைப்பாட்டை எடுத்தோம். ஒரு விஷயத்தை உறுதியாக கூறுகிறோம். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் அதை பாமக எதிர்க்கும். உங்கள் கூடவே நிற்போம்.
மக்கள்தொகை அடிப்படையில் செயல்பட்டால் விகிதாச்சாரம் குறையும். 100 சதவீதம் அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக தான் நிற்போம். சட்டம் காலாவதி ஆகும் போது மறுவரையறை என்பது தானாவே நடைபெறும்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. உள்ளாட்சிக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுவரையறை கேட்க வேண்டும். எந்த உள்ளாட்சியில் எங்களுக்கு மறுவரையறை வேண்டும் என்று கேட்கிறார்கள்.
யாரும் கேட்கவில்லை. சட்டம் காலாவதி ஆகும் போது, மறுவரையறை என்பது தானாகவே நடைபெறும். 7.18 சதவீதம் வரும் போது எந்தவித பாதிப்பும் வராது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்து கட்சி கூட்டத்தில் தெளிவாக கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் வாக்குறுதியை நம்ப வேண்டும்
அமித் ஷா வெளியில் ஒன்று சொல்கிறார். உள்ளே ஒன்று சொல்கிறார் என்றால் விசிக தலைவரை எடுத்துக் கொள்வோம். தீர்மானத்தில் எடுத்த நிலைப்பாடு வேறு. இங்கு சட்டப்பேரவையில் எடுக்கின்ற நிலைப்பாடு வேறு.
நீங்கள் வேண்டுமானால் உங்கள் கட்சியை காப்பாற்றி கொள்ள நிலைப்பாட்டை மாற்றி கொள்ளலாம். ஆனால் பாமக என்றும் எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது.
விசிக வேண்டுமானால் உங்கள் அரசியலையும், கட்சியையும் காப்பாற்றி கொள்ள வேறு நிலைப்பாடு எடுங்கள் என்று கணேஷ் குமார் பேசினார்.
==============