
வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்று இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெட்டு பாய்கிறது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இந்தநிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இதன்காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கையும், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலை கரையை கடக்கும்?
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு, மேற்கு- வடமேற்கு திசையில், வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்று வானிலை மையம் கணித்து இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும், சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை தொடரும்
நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
==================