”கோவிந்தா... கோவிந்தா” விண் அதிர முழக்கம் : பச்சை பட்டு உடுத்திய கள்ளழகர் : வைகை ஆற்றில் இறங்கினார், பக்தர்கள் பரவசம்!

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
highlight of the Chithirai festival, the Kallazhagar, dressed in green silk, descended into the Vaigai River.
highlight of the Chithirai festival, the Kallazhagar, dressed in green silk, descended into the Vaigai River.google
1 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இந்த விழாவின் மகுடம் எது என்றால், சித்ரா பவுர்ணமி அன்று நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமாகும்.

சித்ரா பவுர்ணமி

சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

மதுரையில் கள்ளழகர்

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அழகர்கோவில் மலையில் இருந்து நேற்று முன்தினம் மாலை அழகர் பெருமாள் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார் அழகர்.

மதுரையில் சிறப்பு வரவேற்பு

நேற்று அதிகாலை மூன்றுமாவடிக்கு வந்த அழகரை, மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதிகளில் எதிர்சேவை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார்.

ஆண்டாள் மாலையுடன் அழகர்

அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இன்று அதிகாலை வழியில் உள்ள தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றை நோக்கி பயணித்தார்.

வைகை ஆற்றில் அழகர்

அதிகாலை 5.35 மணி முதல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். அவரை மதுரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்றார். பல லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசித்து பரவசம் அடைத்தனர்.

லட்சக் கணக்கானோர் பங்கேற்பு

மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் துவங்கி வெளிநாட்டினரும் மதுரை வந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டு களித்தனர்.

அழகர் தீர்த்தவாரி உற்சவம்

வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகருக்கு இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்பு வழி நெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் அழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார்.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி, மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டு, பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in