

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது.
தவெகவை ஆதரிக்க போவது யார்?
ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், தவெகவை ஆதரிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது தவெக முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அதிமுகவின் ஆதரவைக் கோருவது.
மற்றொன்று, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவது.
அதிமுக ஆதரவு தருமா?
அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஒருவேளை அதிமுக ஆதரவு அளித்தால் தவெக மிக எளிதாக ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால், பிரசாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசினார். எனவே, பழனிசாமி ஆதரவு அளிப்பாரா என்பது தெரியவில்லை.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்?
மற்றொருபுறம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் விஜய் திட்டமிட்டு வருகிறார்.
தவெகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசி வாயிலாக விஜய்யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு
தேர்தலுக்கு முன்பு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்று விஜய் கூறிவந்தார்.
அந்த எதிர்பார்ப்புடன் விஜய்க்கு ஆதரவு அளிக்கப்போவது யார் என்பது விரைவில் தெரிந்து விடும்.
====