

பெரும்பான்மை கிடைக்காத தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். தவெகவிற்கு 108 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு
எனவே, மற்ற கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தவெகவிற்கு தேவைப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், அதிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர்.
கம்யூனிஸ்ட், விசிக இழுபறி
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களுக்காக இடதுசாரி மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக அழைப்பு விடுத்து வருகிறது. அவர்கள் முடிவை அறிவிக்காததால், ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஆளுநரின் நிலைப்பாடு
118 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன் என்று ஆளுநரும் உறுதியாக நிற்கிறார். எனவே, ஆளுநர் ஆட்சியை நோக்கி தமிழகம் நகர்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
திமுக - அதிமுக கூட்டணி?
இதனிடையே, திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க இருப்பதாகத் தகவல்கள் காட்டுத்தீயாய்ப் பரவி வருகின்றன. தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாத நிலையில், திராவிட கட்சிகளின், அடுத்தகட்ட நகர்வுகள், தவெகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
முதல்வர் இபிஎஸ் - துணை முதல்வர் உதயநிதி
அந்த வகையில், அதாவது இரு கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
’சிறந்த எதிர்க்கட்சியாக இருப்போம் எனவும், தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக எந்த இடையூறும் செய்யாது’ என திமுக கூறுகிறது.
’தமிழக அரசியல் களம் அதிமுகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாளில் நல்ல முடிவு வரும்’ என எடப்பாடி தரப்பு கூறுகிறது.
அதிரடி முடிவு எடுக்கும் தவெக
இந்தச் சூழலில் திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்தால், தவெக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
107 பேரும் ராஜினாமா?
தமிழக வெற்றி கழகத்தின் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் மொத்தமாக ராஜினாமா செய்வதைப் பரிசீலிக்கக்கூடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
==========