

"If you claim victory in 47 seats, then answer for the defeat in 187 constituencies" – C.V. Shanmugam challenges EPS!
47 தொகுதிகளில் வெற்றி என்றால், 187 தொகுதிகளில் அடைந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வாரா என, சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுகவில் மோதல் அதிகரிப்பு
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவில் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஆறு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்து விட்டார்கள்.
எடப்பாடிக்கு எதிராக வேலுமணி அணி
எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு தனி அணியாக செயல்பட்டு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தநிலையில், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சி.வி.சண்முகம் பேட்டி மூலமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.
எடப்பாடியால் வெற்றி கிடைக்கவில்லை
பழனிசாமி பொதுச்செயலராக பொறுப்பேற்ற பின் ஒரு தேர்தலில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை. தேர்தல் தோல்விக்கு மாவட்ட செயலர்களும், பொறுப்பாளர்களும்தான் காரணம் என்கிறார் பழனிசாமி.
187 தொகுதிகளில் தோல்வி - யார் காரணம்?
47 தொகுதிகள் வெற்றிக்கு பழனிசாமி காரணம் என்றால், 187 தொகுதிகளின் தோல்விக்கு அவர் காரணமா? எங்களுக்கு எதிராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிக்கை விடுகிறார் என்றால், எடப்பாடி பழனிசாமி செல்லாக்காசு ஆகிவிட்டாரா? என சி.வி. சண்முகம் விமர்சித்திருக்கிறார்
எடப்பாடியை நோக்கி கேள்விக்கணை
நத்தம் விஸ்வநாதனின் பொறுப்பு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கிறது. விழுப்புரத்தில் மூன்று தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்றது. தர்மபுரியில் நான்கு தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. ஆனால் சேலத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. எடப்பாடியின் சொந்த வார்டில் கூட அதிமுகவுக்கு குறைவான வாக்குகள் தான் கிடைத்தது.
அதிமுக தொடர் தோல்வி
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு பிறகு அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்சி முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது. சேலத்தில் அதிமுக தோல்வியடைந்தது மட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமியின் சொந்த வார்டிலேயே குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் வென்றால் அவர் செல்வாக்கு, மாவட்டங்களில் தோற்றால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு என்கிறார்.
யாரை கேட்டு?
முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர்களை அழைக்காமல் வேண்டப்பட்ட ஆட்களை மட்டும் அழைத்து தேர்தல் தோல்வி குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
பதவிக்காக எடப்பாடி எதையும் செய்ய தயாராகி விட்டார். அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
“தவெக உடனான கூட்டணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை"
முறையான கூட்டணி அமைக்காததே அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணம். திமுகவிற்கு ஆதரவு கொடுக்க துணிந்த போது, தவெகவுக்கு ஆதரவு கொடுக்க என்ன தயக்கம்.
தவெக உடனான கூட்டணி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், கூட்டணிக்கு வந்த தேமுதிகவை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வெளியேற்றினார் என்றார்.
எங்களை அழைத்து பேச எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா?
தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் மாவட்டச் செயலாளர்கள் மீது பழியைப் போடுவதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமியைப பதவியிலிருந்து விலகச் சொல்லவில்லை என்றும், தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராய தைரியம் இருந்தால் தங்களை அழைத்து நேரில் பேச வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
=====