
தென்மேற்கு பருவமழை :
IMD Weather Update Today : நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களில் மழை வெளுத்தி வாங்கி வருகிறது. தலைநகர் டெல்லியில் பலத்த மழை பெய்யும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருமழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால், மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி :
இந்தநிலையில், வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இதுபற்றி வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், “ மத்திய வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி(Low Pressure in Bay Of Bengal) உருவாகி உள்ளது.
வலுப்பெறும் தாழ்வுப்பகுதி :
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா நோக்கி இது நகரக்கூடும்.
தமிழ்நாட்டில் மிதமான மழை :
இதன் காரணமாக, தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி(Pondicherry), காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் ஆகஸ்டு 18 வரை மிதமான மழை தொடரும். நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : சென்னையில் பகலில் வெயில், இரவில் மழை : வானிலை மையம் கணிப்பு
சென்னையில் மழை பெய்யும் :
சென்னை(Chennai Rain) மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” இவ்வாறு வானிலை மைய அறிக்கையில்(IMD Weather Report) தெரிவிக்கப்பட்டு உள்ளது.
===========