”செல்வாக்கு மிக்கவர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது மிகவும் கடினம்” : சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

செல்வாக்கு மிக்கவர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமம் என ஐஏஎஸ் அதிகாரிகள் வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Investigating corruption cases against influential individuals is extremely difficult: Madras High Court judge!
Investigating corruption cases against influential individuals is extremely difficult: Madras High Court judge!source:google
1 min read

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து

இந்தியாவில் அதிக அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட நபர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து முடிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி அளிப்பதில் ஏற்படும் தாமதம் குறித்தான விசாரணையின் போது நீதிபதி இந்த முக்கியக் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

டெண்டர் முறைகேடு வழக்கு பின்னணி

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கந்தசாமி மற்றும் கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கோரப்பட்ட நிலையில், அதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் விளக்கம்

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கடிதம் கடந்த ஜூலை 28 அன்றுதான் தங்களுக்குக் கிடைத்தது என்றும், அது தற்போது பரிசீலனையில் உள்ளது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிபதியின் அதிருப்தியும் நீதிமன்ற உத்தரவும்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்குவதற்கே இவ்வளவு தடைகளும் சிரமங்களும் இருந்தால், அதன் பிறகு இந்த வழக்கின் எதிர்காலம் என்னவாகும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றார்.

மேலும் இந்தியாவில் செல்வாக்கு மிக்க நபர்களின் ஊழல் வழக்கை விசாரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல கடினமானது என்று அதிருப்தி தெரிவித்தார்.

செப்.16ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

மேலும், இந்த ஒப்புதல் கடிதத்தின் தற்போதைய நிலை குறித்தும், தாமதத்திற்கான காரணம் குறித்தும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சார்பு செயலாளர் அடுத்த விசாரணையின் போது காணொலி வாயிலாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in