

விஜயின் ‘ஜனநாயகன்’
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் அதிர்வுகளை ஏற்படுத்திய நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன், சென்சார் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகின இந்தப் படம், அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் படமாக இருப்பதாக கூறப்படுகிறது.
9ம் தேதி மறுஆய்வுக் குழு பார்வை
சென்சார் பிரச்னை, நீதிமன்றத்தில் வழக்கு என அனைத்து தடைகளையும் கடந்து, மறுஆய்வுக் குழு கையில் படம் உள்ளது. தற்போது விடிவை நோக்கி நகர்கிறது ‘ஜனநாயகன்’. ஆம் மார்ச் 9ம் தேதி ( திங்கட்கிழமை ) மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) ‘மறுஆய்வுக் குழு’ (Revising Committee) முன்பாக இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.
இடியாப்ப சிக்கலில் ‘ஜனநாயகன்’
விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படம் மற்றும் கடைசி படம், தமிழக சட்டமன்ற தேர்தல், விஜயின் அரசியல் எழுச்சி போன்ற அனைத்தையும் கொண்டதாக இந்தப் படம் இருப்பதால், நெருக்கடி, விமர்சனங்களுக்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம்.
முதற்கட்டத் தணிக்கையின் போது, படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் மற்றும் வசனங்கள் “நிர்வாகச் சிக்கல்களை” உருவாக்கும் எனத் தணிக்கைக் குழு கருதியதாகத் தெரிகிறது.
குறிப்பாக, தற்கால அரசியல் நிகழ்வுகளைத் தோலுரித்துக் காட்டும் எச். வினோத்தின் கூர்மையான வசனங்களுக்குச் சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட முயல்வதாக கூறப்படுகிறது. எனவே தான் இந்தப் படம் சாதாரண கமிட்டியிலிருந்து மறுஆய்வுக் குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
கத்தரியில் இருந்து தப்புமா ‘ஜனநாயகன்’
அதன்படி, நாளை மறுநாள் மதியம் 2மணிக்கு இந்தப் படத்தை மறுஆய்வுக் குழு பார்க்க இருக்கிறது. இது வெறும் படம் பார்வையிடலாக இல்லாமல், தணிக்கை குழு எத்தனை இடங்களில் கத்தரி போட இருக்கிறது. பன்ச் வசனங்களுடன் படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய்க்கு மாஸ் ஏற்றிய வினோத்
“சதுரங்க வேட்டை” முதல் “துணிவு” வரை சமூகத்தின் கறுப்புப் பக்கங்களை அம்பலப்படுத்தியவர் எச். வினோத். விஜய்க்கு இருக்கும் மாஸ் ரசிகர் பட்டாளத்தை வைத்து, அவரது அரசியல் வருகைக்கான விதையை ஜனநாயகன் மூலம் எச். வினோத் விதைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படும், ஊழல் எதிர்ப்பு மற்றும் அரசாங்கத்தின் தோல்விகள் குறித்த காட்சிகள், CBFC Revising Committee screening முடிவைப் பொறுத்தே இடம்பெறுமா அல்லது வெட்டப்படுமா என்பது தெரிய வரும்.
கட்டுப்பாடுகளும் விளம்பரமாக மாறும்
ஒருவேளை படத்திற்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அதுவே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறிவிடும் என திரையுலகினர் கணிக்கின்றனர்.
விஜயின் முதல் அரசியல் ஆயுதமாக ‘ஜனநாயகன்’ பார்க்கப்படுவதால், தணிக்கைக் குழுவின் ஒவ்வொரு அசைவும் விஜய் ரசிகர்களையும், தமிழக மக்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வைக்கிறது.
120 நிமிடங்களில் - திருப்புமுனை?
திங்கட்கிழமை 2 மணிக்கு தொடங்கும் படத்தின் திரையிடல் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது 120 நிமிடங்களில், தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைக்குமா? அல்லது அதிகாரத்தின் பிடியில் சிக்கித் தவிக்குமா? என்பது தெரிய வரும்.
காத்துக் கிடக்கும் தமிழகம்?
எப்படி இருந்தாலும், விஜயின் ‘ ஜனநாயகன்’- க்காக ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும், விஜய் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் காத்துக் கிடக்கின்றனர் என்பதே உண்மை.
=====