

திமுக கூட்டணியில் காங்கிரஸ்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் போராட்டத்திற்கு பிறகு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது.
திமுகவுடன் காங்கிரஸ் பேச்சு
எந்தெந்தத் தொகுதிகள் என்பதற்கான பேச்சுவார்த்தையை திமுக தலைமையிடம் காங்கிரஸ் நடத்தியது. “28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.
மீதம் இருக்கும் ஐந்து தொகுதிகள் குறித்து மீண்டும் பேசி இறுதி செய்வோம்.
கடந்த முறை வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம்” எனக் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
ஜோதிமணி எம்பி ஆவேசம்
இந்நிலையில், “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது” என எம்பி ஜோதிமணி புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ரகசியமாக வேட்பாளர் தேர்வு
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை.
வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.
உழைப்பை விற்றுத் தின்பதா?
காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.
மவுனமாக இருக்க முடியாது
இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல.
லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம்.
காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது
இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலிலும் அரவக்குறிச்சி தொகுதியைத் திமுகவிடம் காங்கிரஸ் தலைமை விட்டுக் கொடுத்ததை ஜோதிமணி கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
======