

தமிழக சட்டமன்ற தேர்தல்
Kamal Haasan about DMK MNM Alliance Seats : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒருமாதமே இருக்கும் நிலையில், அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. ஒருபக்கம் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் வேட்பாளர்கள் தேர்வு, போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி வருகின்றன.
அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை கிளப்ப, திருத்தணியில் பிரசாரத்தை தொடங்கிய சீமான், சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம்
விஜயும் வேட்பாளர்களை அறிவித்து விட்ட பரபரப்புயை தொடங்க இருக்கிறார். இந்தநிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. வெற்றி வாய்ப்புள்ள 15 தொகுதிகள் கொண்ட பட்டியலையும் திமுகவிடம் அக்கட்சியினர் வழங்கினர்.
டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டி
டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடவும் மக்கள் நீதி மய்யம் விரும்பியது. ஆனால், கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்து இருப்பதால், உதயசூரியனில் போட்டியிட திமுக கேட்டுக் கொண்டது.
இதுபற்றி, கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சின்னத்தில் போட்டியிடுவது சரியாக இருக்காது என்று முடிவு எடுக்கப்பட்டது.
உதயசூரியனில் போட்டியிட விருப்பமில்லை
இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையதாக இல்லாததால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற கட்சியின் முடிவை ஸ்டாலினிடம் கமல்ஹாசன் கூறினார்.
குறைவான தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ நமக்கு தருவதாக சொல்லியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட லேண்டும் என்ற பரிந்துரையும் கட்சி உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.
டார்ச் லைட் சின்னம் அவசியம்
டார்ச் லைட் சின்னத்துடனான கட்சி தொண்டர்களின் பிணைப்பு உணர்வுபூர்வமானது. இந்த சின்னம் வெறும் சின்னம் அல்ல. அது எங்களின் அடையாளம். ஆகவே, இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு நிபந்தனை இன்றி ஆதரவு அளிப்போம்” என்று கூறியுள்ளார்.
திமுகவுக்கு முழு ஆதரவு
பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில், “தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்துள்ளோம். திமுக ஆட்சி தொடர வேண்டும்.
ஆதரவளிப்பது கடமை
திமுகவுடன் நிற்பதை கடமையாக கருதுகிறேன். இது தியாகம் இல்லை, கடமை. திமுகவுக்கு முழுமையான அழுத்தமான ஆதரவு அளிப்போம்” என்றார்.
கமலுக்கு நன்றி - ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது தியாகம் அல்ல, கடமை என்று கமல் கூறினார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம் தான்.
கமலுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவரது முடிவு என்னை நெகிழ வைத்துவிட்டது. தமிழகம் முழுவதும் கமல் வலம் வரவேண்டும். அமையும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினால் ஆனது” என்று குறிப்பிட்டுள்ளார்.
=============